Skip to main content

"நல்ல ஆடைகளை அணியட்டும்" - விமர்சித்த பஞ்சாப் முதல்வர்; பதிலடி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

charanjit singh sunni - arvind kejriwal

 

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலமான பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி படிப்படியாக வளர்ந்துவருகிறது. அடுத்த வருடம் அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி கடும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்தச் சூழலில், அண்மையில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பஞ்சாபை கேலிக்கூத்தாகிவிட்டது என கூறியிருந்தார்.

 

இந்தநிலையில், ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பஞ்சாபின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியிடம் அரவிந்த் கெஜ்ரிவாலின் விமர்சனம் குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்குப் பதிலளித்த சரண்ஜித் சிங் சன்னி, "உங்களிடம் 5,000 ரூபாய் உள்ளதா? அனைவரிடமும் உள்ளது. அவருக்கும் (கெஜ்ரிவால்) 5000 ரூபாயை கொடுங்கள்... குறைந்தது நல்ல ஆடைகளையாவது அவர் அணியட்டும்... அவரால் ஒரு சூட்-பூட் வாங்க முடியவில்லையா? அவரது சம்பளம் 2,50,000 ரூபாய்.. இருந்தும் அவரால் நல்ல உடைகளை வாங்க முடியவில்லையா" என்றார்.

 

சரண்ஜித் சிங் சன்னியின் இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக, "உங்களுக்கு என்னுடைய உடைகள் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. பொதுமக்களுக்கு அது பிடித்திருக்கிறது. ஆடைகளை விடுங்கள். (தேர்தல்) வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள்?. வேலையில்லாதவர்களுக்கு எப்போது வேலை கொடுப்பீர்கள்? விவசாயிகளின் கடன்களை எப்போது தள்ளுபடி செய்வீர்கள்? குரு கிரந்த் சாஹிப் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்போது சிறைக்கு அனுப்புவீர்கள்? கறைபடிந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்