மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலோடு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் இன்று (20-11-24) இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள் கடேஹரி, கர்ஹால், மிராபூர், காசியாபாத், மஜவான், சிசாமாவ், கைர், புல்பூர் மற்றும் குந்தர்கி ஆகிய தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், காவலர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளதாக முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வாக்காளர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி வாக்களிக்க விடாமல் தடுத்த மீராபூரின் ககர்வாலி காவல் நிலையப் பகுதியின் எஸ்.எச்.ஓ.வை தேர்தல் ஆணையம் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மிராபூரில் உள்ள சில பெண் வாக்காளர்களை நோக்கி ஒரு போலீஸ் அதிகாரி, தனது சர்வீஸ் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அந்த போலீசார், சில போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து அவர்களை தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்துவது போல் அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, வாக்காளர்களின் அடையாள அட்டைகளை சரிபார்த்து, தேர்தல் வழிகாட்டுதல்களை மீறியதாக சமாஜ்வாடி கட்சியினர் குற்றம் சாட்டியதையடுத்து, 7 காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
मीरापुर के ककरौली थाना क्षेत्र के SHO को चुनाव आयोग तुरंत निलंबित किया जाए, क्योंकि वो रिवॉल्वर से धमकाकर वोटर्स को वोट डालने से रोक रहे हैं। @ECISVEEP @SECUttarPradesh@rajivkumarec@spokespersonECI@ceoup#ECI#YouAreTheOne#IVoteForSure#UPPolitics#SamajwadiParty pic.twitter.com/WfiygzqO0t— Akhilesh Yadav (@yadavakhilesh) November 20, 2024