இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூ-டியூப் சேனல்கள், 19 சமூக வலைத்தள கணக்குகள், 747 வலைத்தள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 69A பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் 8 யூ-டியூப் சேனல்கள் மத்திய அரசால் முடக்கப்பட்டது.
இந்நிலையில் "தேச பாதுகாப்பிற்கு எதிராக எந்த ஒரு சமூக ஊடகம் கருத்து வெளியிட்டாலும் அந்த ஊடகம் தடை செய்யப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார்." ஒண்டி வீரன் 251வது பிறந்த நாளை ஒட்டி தபால் தலை வெளியிடும் நிகழ்விற்காக தூத்துக்குடி வந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "கருத்து சுதந்திரம் என்பது நமது நாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு எதிராக, இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த நிறுவனம் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு வருடத்தில் 100க்கும் அதிகமான யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. நேற்றுகூட 8 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. இது எல்லாம் தேசத்திற்கு எதிராக கருத்து சொல்வது, இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்து சொல்வது போன்ற செயல்களை செய்தவை. சில பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை மத்திய அரசு எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.