Skip to main content

காங்கிரஸுடன் கூட்டணி இல்லை; ஆம் ஆத்மி திட்டவட்டம்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Aam Aadmi Scheme on No alliance with Congress

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ, மும்பை என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. ஆனால் ‘இந்தியா’ கூட்டணியைப் பிரதமர் மோடியும், பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகங்களை வகுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சில தினங்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், டெல்லியில் மொத்தம் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும். அதற்குத் தீவிரமாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்கா லம்பா தெரிவித்திருந்தார்.

 

இதற்கு டெல்லியில் இருக்கும் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினரே போட்டியிட்டால், நாங்கள் எங்கு போட்டியிடுவது. இதுதான் கூட்டணி தர்மமா? என்று ஆம் ஆத்மி கட்சியினர் எதிர் வினையாற்றி வந்தனர். ஆனால், டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா, அல்கா லம்பாவின் கருத்தைத் திட்டவட்டமாக மறுத்து கருத்து தெரிவித்திருந்தார். அதன் பின்னர் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் முடிந்த அளவு இணைந்து செயல்பட வேண்டும் என இந்த கூட்டணியில் சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், மொத்தமுள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்றும் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான அன்மோள் ககன் மன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த கூட்டணியும் இல்லை. பஞ்சாப் மக்கள், முதல்வர் பகவந்த் மன்னை மிகவும் நேசிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியுடனான எந்த கூட்டணியையும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அந்த கட்சியைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் நாங்கள் தான் பொறுப்பாளர்கள். இதில் சமரசத்துக்கே இடமில்லை. அதனால், மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்