கனமழை காரணமாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை 7-ஆம் தேதி கனமழை எச்சரிக்கையால் அனைத்து அரசு ஊழியர்களும் பணியில் இருக்க முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவுவிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களாக புதுச்சேரியில் தொடர்மழை பொழிந்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வனி குமார், உள்ளாட்சி, பொதுப்பணி மற்றும் மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் எதிர்வரும் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நீர் தேங்கும் பகுதிகள் கண்டறிந்து அங்கிருந்து தண்ணீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறையினர் ஒருங்கிணைத்து 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை ஒன்றை துவங்கி அதன் மூலம் வரும் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மொஹரம் பண்டிகைக்கு விடப்பட்ட விடுமுறையின் காரணமாக இன்று அரசு வேலை நாளாக அறிவித்திருந்த நிலையில் கனமழை காரணமாக அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துக்கும் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஏழாம் தேதி 25 சென்டி மீட்டருக்கு மேலாக கனமழை இருக்குமென வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அன்றையதினம் அரசு ஊழியர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.