மைசூர் மாகாண மன்னராக இருந்த திப்பு சுல்தானை நினைவுகூரும் வகையில் திப்பு ஜெயந்தியைக் கொண்டாட, அப்போதைய முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில அரசின் கன்னட மொழி மற்றும் கலாச்சார துறை சார்பில் கொண்டாடப்பட்டு வந்தது. திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதலே இந்த விழாவுக்கு பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடகா சட்டப்பேரவையில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.முதல்வர் எடியூரப்பாவுக்கு 106 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், திப்பு ஜெயந்தியைக் கொண்டாடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய அரசு அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா "நான் திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களை மட்டுமே தொடங்கினேன். இப்போது பாஜக சிறுபான்மையினர் மீதான வெறுப்பின் பேரில் இந்த கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. திப்பு சுல்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடிய மனிதர் என்பதால் கர்நாடக மக்கள் திப்பு ஜெயந்தியை ஏற்றுக்கொண்டனர். என்னைப் பொறுத்தவரை, அவர் இந்த நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர். திப்பு சுல்தான் சிறுபான்மையினர் மட்டுமில்லை. அவர் மைசூரு மாகாண மன்னராக இருந்தவர் என்றும், அவர்தான் கே.ஆர்.எஸ். அணைக்கு அடிக்கல் நாட்டினார். அவரின் ஆட்சி காலத்தில் மைசூரு பெரும் வளர்ச்சி கண்டது" என்றார்