நாடு முழுவதும் 17- வது மக்களவை தேர்தல் ஏழுக் கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆறு கட்டத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் கடைசி கட்டத் தேர்தல் மே-19 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மே -23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெறயுள்ளது. இதனால் அடுத்து ஆட்சி அமைப்பது யார்? என்ற கேள்வி வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு முன்பே தொடங்கியுள்ளது. காங்கிரஸ் , பாஜக , மாநிலக்கட்சிகள் என அனைவரும் மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிரம் காட்டி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே மே -21 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தெலுங்கு தேசம் , பிஜு ஜனதா தளம் , தெலங்கானா ராஷ்டீரிய சமிதி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத மாநில கட்சிகளுக்கு சோனியா திடீர் கடிதம் எழுதியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. ஏனெனில் தற்போது நடைப்பெற்று வரும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமலும் , அடுத்து ஆட்சி அமைப்பது குறித்து எதுவும் பேசாமல் ஓய்வில் இருந்த நிலையில் பாஜக கூட்டணிக்கு அதிரடி காட்டும் வகையில் சோனியா கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.