கோவில் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சாமி சிலையை தொட்டதாகக் கூறி சிறுவனின் குடும்பத்திற்கு கோவில் நிர்வாகம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் கர்நாடக மாநிலம் கோலாரில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வந்தன. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 8 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோலார் மாவட்டத்தின் ஆட்சியர் வெங்கட ராஜா அந்த சிறுவனையும், அச்சிறுவனின் குடும்பத்தினரையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்று சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்து சாமி தரிசனம் செய்ய வைத்து அனுப்பி வைத்தார்.
அண்மையில் தமிழகத்தில் கூட தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளத்தில் பள்ளி சிறார்களுக்கு தின்பண்டங்கள் வழங்க முடியாது என கடை ஒன்றில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.