5ஜி தொலைத்தொடர்பு சேவை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாகப் பெருகும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 5ஜி சேவை குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலர் எஸ்.கே. குப்தா, இந்தியாவில் தற்போது 40 கோடி மக்களுக்கு தரமான இணையதள சேவை கிடைக்கிறது என்றும். இந்தியாவில் 2022-ம் ஆண்டு முதல் 5ஜி சேவை தொலைத் தொடர்புத்துறையில் பின்பற்றப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி நடைமுறைக்கு வந்தால் 4ஜியைக் காட்டிலும் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5ஜி சேவை மக்களின் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.
ஒரு நொடியில் 1-ஜிபி டேட்டா பதிவிறக்க வேகம், இடைநிற்றல் இல்லாமல் வீடியோ காணும் வசதி, துல்லியமான காட்சிகள், ஒலிகள் ஆகியவை 5ஜி சேவையின் சிறப்பம்சங்களாக இருக்குமெனவும் கூறப்படுகிறது.
இதற்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே 5ஜி சேவை அமெரிக்காவிலும் தென்கொரியாவிலும் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.