உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ், இந்தியாவில் இதுவரை 42 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் 6 பேர், காஷ்மீரின் லடாக்கில் 2 பேர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2 பேர், தமிழகம், ஹைதராபாத்தில் தலா ஒருவர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் மூன்று வயதுக் குழந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை ஐந்து பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இத்தாலியிலிருந்து கொச்சி திரும்பிய தம்பதியின் 3 வயதுக் குழந்தைக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல குழந்தையின் பெற்றோருக்கும் அறிகுறிகள் தென்படுவதால்,அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.