வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் 33 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று தொடங்கப்பட்டது.
ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த கன்றுகள் நடப்பட உள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை பசுமையாக்கும் இந்த திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அம்மாநில அரசு செய்து வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
2017 ஆம் 4 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன்பின் கடந்த ஆண்டு 13 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மரக்கன்று நடும் நிகழ்வை இன்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 33 கோடி மரக்கன்றுகள் நட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.