கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.
கடந்த ஒருமாதமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் இயங்காததுடன், பொதுத்தேர்வுகளும், செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து பெற்றோர்களிடம் காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றினார் ரமேஷ் பொக்ரியால். இதில் பெரும்பாலான பெற்றோர்களின் கேள்வி, பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதாகவே இருந்தது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், "ஊரடங்கு முடிவடைந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பும்போது மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். இப்படிப்பட்ட சூழலில், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை எல்லா நேரங்களிலும் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேநேரம் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருப்பதைப் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்பது குறித்து சிபிஎஸ்இ ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. தேர்வுகள் நடத்தப்படாத பாடங்களுக்கு, முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார். 10- ஆம் வகுப்பிற்கு, சில தேர்வுகள் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படாது எனவும், 12- ஆம் வகுப்புக்கு முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் இருக்கும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.