Skip to main content

முதல் ஆளாக பிரச்சாரத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலின்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
ddd

 

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை, முதல் ஆளாக தனது தாத்தா பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவங்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

 

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். கரோனா இருந்தாலும் திட்டமிட்டபடி தேர்தல் நடந்தே தீரும் என தலைமை தேர்தல் ஆனையர் திட்டவட்டமாக கூறிவிட்டார். வாக்காளர் வரைவு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

 

இந்த சூழலில் வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள ஆளும்கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் என போட்டிப்போட்டுக்கொண்டு ஆயத்தமாகி வருகின்றனர். பாஜக எப்படியாவது தமிழக சட்டமன்றத்தில் நுழைந்துவிட வேண்டும் என வேல்யாத்திரை மூலம் தங்களுக்கான கூட்டத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறது. ஆளும் அதிமுகவோ ஜெயலலிதா பாணியில் கரன்சியையும், அதிகாரத்தையும் ஒருபுறம் பலமாக நம்பிக்கொண்டு, மறுபுறம் அரசு நிகழ்ச்சிகள் மூலம் தங்களது சாதனைகளை கூறிவருகிறது.

 

ddd

 

எதிர்கட்சியான திமுகவோ இந்த தேர்தல் வாழ்வா சாவா தேர்தல் என பல வியூகங்களை வகுத்து களத்திற்கு சென்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இணையதளம் மூலம் தமிழகத்தை மீட்போம் என முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்திருக்கிறார். திமுகவின் தேர்தல் பணிக்குழுவினரும் மாவட்டம் மாவட்டமாக சென்றுள்ளனர். 

 

இந்தநிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் நபராக நூறுநாள் தேர்தல் பிரச்சாரப்பயணத்தை தனது தாத்தாவின் பிறந்த ஊரான திருக்குவளையில் துவங்கி திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்ககளில் முதற்கட்டமாக முடிக்கிறார்.

 

ddd

 

உதயநிதியின் வருகைக்காக நாகை மாவட்டம் திருக்குவளையில் திமுகவினர் உற்சாகமாக வேலைகளை செய்து வருகின்றனர். அதேபோல திருவாரூரிலும் மயிலாடுதுறையிலும் பேனர், போஸ்டர் என வேகமெடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து நாகை மாவட்ட திமுகவினர் கூறுகையில், "உதயநிதியின் வருகை சோம்பிக்கிடக்கும் திமுகவினரை உற்சாகப்படுத்தும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் அவரது வருகைக்கு பிறகு கட்சியில் உள்ள இளைஞர்களின் எழுச்சி அதிகமாகியது. அதோடு அவரது பிரச்சாரமும் சற்று கை கொடுத்தது. அதை எல்லாம் தாண்டி உதயநிதி கலைஞரைப்போல கைராசிக்காரர். அதனாலத்தான் அவரே முதலில் மக்களை சந்திக்கும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருக்குவளை கலைஞர் பிறந்த ஊர் என்பதை தாண்டி செண்டிமெண்டான ஊர் என்பதால் அங்கிருந்து துவங்கப்படுகிறது. கரோனா ஊரடங்கை காரணம் காட்டி அதிமுக தடுக்க நினைத்தால் தடையை மீறி பிரச்சாரம் செய்வோம், அதன்பிறகு அவங்க எங்கேயும் ஒரு நிகழ்ச்சிக்கூட நடத்த முடியாதபடி செய்திடுவோம்" என்கிறார்கள்.

 

கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக பொருப்பேற்றதும், திருக்குவளைக்கு வந்த உதயநிதிக்கு வழி நெடுகிலும் அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்