
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய மற்றொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது. அப்போது, கோயிலில் பட்டியலின மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய கடந்த பிப்ரவரி 20ஆம் தேது உத்தரவிடப்பட்டது.
அந்த வகையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு திரெளபதி அம்மன் கோயில் நேற்று (17-04-25) திறக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி கோயிலில் ஏற்கெனவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், இரு சமூக மக்களும் சாமி தரிசனம் செய்ய நேற்று கோயில் திறக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில், கோயில் திறக்கப்பட்டதால் 300க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆனால், மற்றொரு சமூக மக்கள் நேற்று கோயிலுக்குச் செல்லாமல் வெள்ளிக்கிழமையான இன்று முதல் கோயிலுக்குச் செல்வதாகக் கூறினர்.

இந்த நிலையில், பட்டியலின மக்கள் சென்றதால் மற்றொரு சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஊரை விணாக்கிட்டீங்க, கோயிலை வீணாக்கிட்டீங்க என மற்றொரு சமூக பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலையச் செய்தனர். இரண்டாம் நாளான இன்று (18-04-25) திரெளபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டது. ஆனால், காலை 7 மணி முதல் பட்டியலின மக்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.