தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 3,713 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1,939 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 78,335 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் மொத்த பாதிப்பு 51,699 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 33,213 பேர் தமிழக மருத்துவமனைகளில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இன்று ஒரே நாளில் 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் 44,094 பேர் இதுவரை மொத்தமாக கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, தமிழகத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பதிவான உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்த எண்ணிக்கையே மிக அதிகம். அரசு மருத்துவமனைகளில் 45 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 46 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். வேறு நோய்தொற்று பாதிப்பு இல்லாத 8 பேர் இன்று கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தவர்களில் 50 வயதுக்குட்பட்டோர் 14 பேர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தற்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கையானது 1,025 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் 249 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 28-வது நாளாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 776 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 75 பேரும், திருவள்ளூரில் 58 பேரும், காஞ்சிபுரத்தில் 18 பேரும், மதுரையில் 20 பேரும், விழுப்புரத்தில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 927 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 248 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் மேலும் 195 பேருக்கு கரோனா பாதிப்பு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1500-ஐ கடந்துள்ளது. தற்போது மொத்த எண்ணிக்கையானது 1,672 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,036 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கோவையில் இன்று ஒரே நாளில் 157 பேருக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது, இதுவரை 393 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கோவையில் 210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் உயிரிழப்பு 2 ஆக உள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது 400 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 137 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,414 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர், 299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 923 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருவண்ணாமலையில் இன்று 120 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,619 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருவண்ணாமலையில் 42 ஆயிரத்து 332 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 111 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த 3 நாட்களாக 55, 89, 111 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து வருகிறது. அதேபோல் சேலம் மாவட்டத்தில் 373 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 113 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு இதுவரை வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 18. மாவட்டம் முழுவதும் இதுவரை 829 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் மொத்த பாதிப்பு 1,693 ஆக உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது 1,123 ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 327 பேர் குணமடைந்துள்ளனர். 600க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று முதலில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் பகுதியில், 50 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் 51 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.