Schools will have to be visited by the end of May Director of School Education

Advertisment

தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை பரவல் அதிகமாக இருப்பதால் மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,அனைத்து பள்ளிகளும் முழுமையாக மூடப்பட்டன. ஆனால், ஒரு சில அலுவலக பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், வருகிற மே 1ஆம் தேதி சனிக்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும்வரை பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டதாவது, “அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வருகிற 1ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வர தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கானபொதுத் தேர்வு தேதி குறித்து மறுஅறிவிப்பு வரும்வரை அவர்களுக்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டுல் இருந்தபடியே தொடர்ந்து வழங்க வேண்டும்.

மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் மெட்டீரியல் மற்றும் ஒர்க் புக்கில் உள்ள பாடங்களைக் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும், வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள செல்ஃபோன், வாட்ஸ் அப் அல்லது பிற டிஜிட்டல் வழிகள் மற்றும் மாற்று வழிகளைப்பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்கள் மேற்காணும் வழிகளில் அனுப்பும் பயிற்சிகளுக்கான விடைத்தாள்களை சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisment

அடுத்த கல்வியாண்டுக்குப் பள்ளிகளைத் தயார் செய்யும் பொருட்டும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்வதன் பொருட்டும், 2021 மே மாதம் கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும். இதற்கான மறுஅறிவிப்பு தனியே வெளியிடப்படும்” என தெரிவித்தார்.