Skip to main content

மடியில் கனம் இருப்பதால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை அ.தி.மு.க.வால் தடுக்க இயவில்லை: திருநாவுக்கரசர்

Published on 23/03/2018 | Edited on 23/03/2018

 

Cauvery management board



காவேரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை பெற்றிருக்கிற அ.தி.மு.க. அத்தகைய அழுத்தத்தை தர, துணிவற்ற நிலையில் இருக்கிறது. மடியில் கனம் இருப்பதால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை அ.தி.மு.க.வால் தடுக்க இயவில்லை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

காவேரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வார காலத்திற்குள் நதிநீர் பங்கீடு சட்டப் பிரிவு 6ஏ-யின்படி செயல்திட்டம் (ஸ்கீம்) உருவாக்கப்பட வேண்டுமென்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின்படி ஏப்ரல் 1 ஆம் தேதியோடு ஆறுவார காலம் முடிவடைகிறது. இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கிறது. ஆனால் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் கூற்றின்படி ஆறுவார காலத்திற்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று கூறிவருகிறார்கள். இதற்கு நான்கு மாநில அரசுகளோடு கலந்து பேசி செயல்திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று கூறுவது இல்லாத ஊருக்கு வழிதேடுகிற முயற்சியாகும். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் ‘ஸ்கீம்” என்று இருக்கிறதே தவிர, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

 

ops-eps600.jpg


2007 இல் வெளிவந்த நடுவர்மன்ற தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான நீர் பங்கீட்டு அளவை 14.25 டி.எம்.சி. குறைத்ததே தவிர, மற்றவை அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் காவேரி மேலாண்மை வாரியம், காவேரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டுமென்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை மூடி மறைத்துவிட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஸ்கீம் என்று தான் கூறப்பட்டிருக்கிறது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று கூறவில்லை என்று திரிபு வாதம் பேசுவது மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்கு செய்கிற மிகப்பெரிய துரோகமாகும். ஏற்கனவே 2016 இல் உச்சநீதிமன்றத்திடம் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று உறுதி கூறிவிட்டு இறுதியாக மத்திய பா.ஜ.க. அரசின் தலைமை வழக்கறிஞர் அதிலிருந்து பின்வாங்கியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, காவேரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு ஒரு பரிந்துரையே தவிர, அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றுகிற பொறுப்பு மத்திய அரசுக்கு இல்லை என்று கூறியதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆக, தொடக்கத்திலிருந்தே காவேரி நடுவர்மன்ற தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் செயல்படுத்துவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. 
 

காவேரி பிரச்சினையைப் பொறுத்தவரை அரசியல் ஆதாய உள்நோக்கத்தோடு நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலமாக 25 ஆண்டுகாலமாக நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் நிலைநாட்டப்பட்ட தமிழகத்தின் உரிமையை பறிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. 

காவேரி பிரச்சினையைப் பொறுத்தவரையில் காவேரி நடுவர்மன்றம் அமைப்பு, இடைக்கால தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது, 2007 இல் இறுதி தீர்ப்பு, இதை மத்திய அரசிதழில் வெளியிட்டது என அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாகவே தமிழகம் தமது உரிமைகளை நிலைநாட்டியிருக்கிறது. இத்தகைய நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்பு தமிழகம் காவேரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை தொடர்ந்து பறித்து துரோகம் செய்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. 

 

Thirunavukarasar


 

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைககளை காப்பாற்றுகிற வகையில் எஞ்சியிருக்கிற ஒருவார காலத்திற்குள் மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்டி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறுவார காலக்கெடு முடிந்து ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் மத்திய பா.ஜ.க. அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறினால் தமிழகம் தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தும். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தத்தை தராமல் நாடாளுமன்றத்திற்கு வெளியே பெயரளவில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கண்துடைப்பு நாடகத்தை அ.தி.மு.க. நடத்தி வருகிறது. உண்மையிலேயே மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க அ.தி.மு.க. விரும்பியிருந்தால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதென முடிவெடுத்திருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை பெற்றிருக்கிற அ.தி.மு.க. அத்தகைய அழுத்தத்தை தர, துணிவற்ற நிலையில் இருக்கிறது. மடியில் கனம் இருப்பதால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை அ.தி.மு.க.வால் தடுக்க இயவில்லை.
 

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், இதில் அ.தி.மு.க.வின் மெத்தனப் போக்கை கண்டித்தும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிற முயற்சியில் தமிழக காங்கிரஸ் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்