"இந்த டெண்டரை என்னுடைய ஆளுக்கு ஒதுக்கலைன்னா நீ உயிரோடு இருக்க மாட்ட.! குடும்பத்தையே கொளுத்திப்புடுவேன்." என மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநரிடம் மிரட்டிய, அமமுக மா.செ. உமாதேவனை அலுவலகத்திலேயே பூட்டி வைத்துவிட்டு அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி தர்ணா செய்து வருகின்றனர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்.
"இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்திற்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும் அமமுக மா.செ.வுமான உமாதேவன், " எதற்காக இந்த டெண்டருக்கு எங்களை கூப்பிடலை..?" என திட்ட இயக்குநர் வடிவலுவிடம் அதிகாரத் தோரணையில் மிரட்ட, " சார்..! இன்னும் அந்த டெண்டருக்கு யாருக்கும் அழைப்பே அனுப்பவில்லை, தேதியும் முடிவாகவில்லை. டெண்டருக்கான தேதி முடிவானவுடன் அனைவரையும் அழைப்போம். அது போக, நீங்கள் இந்த டெண்டருக்கு ஒப்பந்த புள்ளி போட்டுள்ளீர்களா..?" என அவர் திருப்பி கேட்க, அச்சில் ஏற்ற முடியாத, காது கூசும் அளவிற்கான வார்த்தைகளை பிரயோகம் செய்ததோடு மட்டுமில்லாமல், " ...... எப்ப வேண்டுமானாலும் தேதியை அறிவித்துக் கொள்..! ஆனால் என்னுடைய ஆளுக்கு மட்டும் நீ அந்த டெண்டரை ஒதுக்கலைன்னா உயிரோடவே இருக்க முடியாது.
கொளுத்திப்புடுவேன்." என கூறிக்கொண்டே எங்களது திட்ட இயக்குநரை அடிக்க பாய்ந்தார் மா.செ.உமாதேவன். நாங்களும் சமாதானம் செய்து பார்த்தோம். அவர் விடுவதாக இல்லை. வாசலில் இருந்த அவரது அடியாட்களான அன்புமணி, மேப்பல் ராஜேந்திரனை கூப்பிட்டு எங்கள் மீதும் தாக்க வந்தார். வேறு வழியில்லாமல் அவரை உள்ளே வைத்து பூட்டி வைத்து விட்டு தர்ணாவில் ஈடுப்பட்டோம்." என்றார் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களில் ஒருவரான செல்வக்குமார்.
சிவகங்கை நகரக் காவல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து அமமுக மா.செ.உமாதேவனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து 147, 452, 353, 209-B. 506/2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து ரிமாண்டிற்கு அனுப்பியுள்ளனர். அடாவடிப் பேர்வழியான சிவகங்கை மாவட்ட அமமுக மா.செ.உமாதேவன் இதற்கு முன்னதாக கூட்டுறவுத் தேர்தலுக்கான விவகாரத்தில் தேர்தல் அலுவலராக இருந்த கூட்டுறவு சார் பதிவாளர் கலைச்செல்வத்தை தாக்கிய வழக்கு காரைக்குடியில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.