Skip to main content

“பெருமைப்படுகிறேன்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து!

Published on 11/05/2025 | Edited on 11/05/2025

 

 US President Trump's comment Proud

ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.

அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து இந்த தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று (10.05.2025) மாலை 05.00 மணியளவில் இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இருப்பினும் நேற்று இரவு 10.30 மணியளவில் எல்லை தாண்டி இந்தியா மீது 11 இடங்களில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்தியா சார்பில் எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக எல்லைக்கோட்டுப் பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைதி திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருக்கிறது. அதன்படி ஜம்மு நகரச் சாலைகள் அமைதியாகக் காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை முழுமையாக அறிந்து புரிந்துகொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைப் பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் பலரின் மரணத்திற்கும், அழிவுக்கும் வழிவகுக்கும். இதன் மூலம் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் துணிச்சலான செயல்களால் உங்கள் மரபு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 US President Trump's comment Proud

இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படாவிட்டாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் நான் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். அதோடு,  ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் காஷ்மீர் தொடர்பான பிரச்சனையில் ஒரு தீர்வை எட்ட முடியுமா? என்பதைப் பார்க்க உங்கள் இருவருடனும் நான் இணைந்து பணியாற்றுவேன். சிறப்பாகச் செய்யப்பட இந்த பணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைக்கு கடவுள் ஆசிர்வதிப்பாராக” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்