கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி, கட்சியின் மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தின் கீழ் உதவி கேட்டு வந்த மனுக்களை கடந்த 12 ஆம் தேதி கரூர் கலெக்டர் அன்பழகனிடம் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, 'கரூர் கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்கிற முறையில் என்னை அழைக்காமல் கூட்டம் நடத்துகிறார். இது குறித்து கலெக்டரிடம் கேட்டால், அலுவலங்களில் நடக்கும் கூட்டம் பற்றி எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தகவல் தெரிந்தால் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்கிறார். இனி இது போல் என்னை அழைக்காமல் கூட்டம் நடந்தால் அந்த நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம். கரூர் கலெக்டர் அன்பழகன் படித்த முட்டாள்; இனி ஆய்வுக் கூட்டத்துக்கு எங்களை அழைக்காமல் இருந்தால், அவர் வெளியே நடமாட முடியாது' என்று பேசினார்.
இந்தப் பேச்சு பத்திரிகையில் வெளியானவுடன் மிரட்டும் தொனியில் பேசிய, எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மீது, நடவடிக்கை எடுக்கும்படி, தான்தோன்றிமலை போலீசில், கலெக்டர் அன்பழகன் புகார் அளித்தார். இதையடுத்து, கொலை மிரட்டல் விடுத்தல், அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தையில் திட்டியது, ஊரடங்கை மீறியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் செந்தில் பாலாஜி உட்பட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
செந்தில்பாலாஜியின் மீது இந்தத் திடீர் வழக்கு தி.மு.க. வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.