கரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் வரும் மே- 31 ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனிடையே மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
அதையடுத்து புதுச்சேரிவாசிகள், அம்மாநிலத்தின் அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களான தமிழக பகுதிகளில், மதுபானங்களை திருட்டுத்தனமாக வாங்கி சென்றனர். இதனால் கரோனா தொற்று பரவிவிடும் என இரு மாநிலங்களிலும் அச்சம் நிலவியது. மேலும் புதுச்சேரியின் வருவாய் பாதிக்கப்பட்டதோடு மதுக்கடை உரிமையாளர்களும் மதுக்கடைகள் திறக்க கோரிக்கைகள் விடுத்தனர்.
அதையடுத்து மதுக்கடை திறப்பது சம்பந்தமாக மாநில அமைச்சரவைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்றி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் ஊரடங்கு காலத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 102 மதுக்கடைகள் சம்பந்தமாக சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த கடைகள் திறக்க முடியாது என்றும், கலால் வரி உயர்த்த வேண்டும், கரோனா வரி விதிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் புதுச்சேரி மாநில வருவாயை பெருக்க தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். அப்போதுதான் புதுச்சேரிக்கு வருவாய் நேரடியாக அரசுக்கு வரும் என்று அழுத்தம் கொடுத்தார்.
இவைகளை அரசு ஏற்காததால் கோப்புகளில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வந்தார் கிரண்பேடி. இதனால் மதுக்கடை திறப்பதில் இழுபறி நீடித்தது. அதையடுத்து முதல் கட்டமாக கிரண்பேடியின் நிபந்தனைகளில் கரோனா வரி விதிப்பிற்கு அரசு ஏற்றுக்கொண்டதால் 23.5.2020 இரவு மதுக்கடைகளை திறப்பது சம்பந்தமான கோப்பில் கிரண்பேடி கையெழுத்திட்டார். அதையடுத்து புதுச்சேரியில் மதுபானக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. 2 மாதங்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் மதுபானங்களின் விலை தமிழகத்திற்கு இணையாக மூன்று மடங்கு விலை உயத்திய நிலையிலும் குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வரிசையில் நின்று, முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மதுபானங்களை வாங்கிச்சென்றனர். ஒவ்வொரு மதுக்கடை முன்பும் திருத்தப்பட்ட விலை பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அதேசமயம் ஊரடங்கின்போது கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 102 மதுபானக் கடைகள் திறக்க இன்று அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புதுச்சேரியில் அதே கூட்டணி அரசு மதுக்கடை திறக்கிறதே என கூறி அ.தி.மு.க சார்பாக முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தனது கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க உறுப்பினர்களுடன் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மதுக்கடை திறப்பை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் புதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க தலைவர் அமைதி காப்பது மதுக் கொள்கையில் இரட்டை வேடம் போடுகின்றார்” என்பதை சுட்டிக் காட்டும் வகையில் போராட்டம் நடத்துகிறோம் என கூறினார்.