மதுரை என்கவுண்டரில் தப்பிய மாயக்கண்ணன் விருதுநகர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சரண் அடைந்த மாயக் கண்ணன், இரு நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு விருதுநகர் கிளைச் சிறைக்கு விருதுநகர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்- 1 மும்தாஜ் உத்தரவின் பேரில் அனுப்பப்பட்டார்.
மதுரை என்கவுன்டரில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் இருவரும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த என்கவுன்டரில் தப்பி ஓடியதாக கூறப்பட்ட சிக்கேந்தர் சாவடி மந்தையம்மன் தெரு அழகர்சாமி மகன் ரவுடி மாயகண்ணன் இன்று மாலை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண்- 1ல் தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி சரண்டர் ஆனார்.
அதை தொடர்ந்து நீதிபதி மும்தாஜ் விசாரணை செய்ததில் அவரை இன்றும் நாளையும் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் இவர் மீதுள்ள கொலைவழக்கிற்கு வாடிப்பட்டி நீதி மன்றத்தில் மார்ச் 5 தேதி ஒப்படைக்க உத்தரவிட்டார்.அது வரை விருதுநகர் மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.