
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் விளாத்திகுளத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் ரூபம் வேலவன் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர். இளைஞரணி ஒன்றிய செயலர் ராமசாமிபாண்டியன், ஜெயலலிதா பேரவை நகர செயலர் பொன்ராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அஇஅதிமுகவுக்கு பொதுச்செயலராக சசிகலா தொடர வேண்டும். பொதுச்செயலர் சசிகலாவுக்கு எதிராக சில மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள் கிளைக் கழக நகர கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒப்புதல் பெறாமல் அவர்களது விருப்பத்திற்கு மாறாக சிலபேரை மட்டும் கூட்டி நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
அதிமுக ஒற்றுமையுடனும் வலிமையுடன் செயல்படும் நோக்கத்தோடு தொலைபேசி வாயிலாக சசிகலா உடன் உரையாடி வரும் அதிமுக உறுப்பினர்களை சர்வாதிகாரத் தன்மையோடு நீக்கி வருவதை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சசிகலா, மாவட்டம் தோறும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி தொண்டர்களை சந்தித்து தொண்டர்களின் கட்சிதான் அதிமுக என்பதை வலுப்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்துகிறோம்.

கழகம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஓரணியில் திரளும் நோக்குடன் தொண்டர்களை நோக்கி சந்திப்பு பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலாவின் வருகையை இக்கூட்டம் மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறது என்பன உள்ளிட்ட 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலர்கள் ஜெயசீலன், முருகன், நகர பொருளாளர் சுதாகர், நகர துணை செயலர் சின்ன முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித் குமார் மீனவரணி மாவட்ட இணை செயலர் சூசை மற்றும் ஊராட்சி, கிளைக்கழக செயலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.