Skip to main content

7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

Published on 09/09/2018 | Edited on 09/09/2018
jeyakumar

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,  ‘’சட்டப்பிரிவு 161ன் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.  இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு இன்றே அனுப்பி வைக்கப்படும்.  பரிந்துரையை ஏற்று ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுப்பார்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர்,  தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.  7 பேர் விடுதலையில் ஆளுநர் காலதாமதம் செய்ய வேண்டிய சூழல் இல்லை.  மத்திய அரசின் ஒப்புதலை கேட்க வேண்டிய அவசியமில்லை.  7 பேரை விடுவிக்க ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

 

e

 

சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1999ம் ஆண்டில் குண்டுவெடிப்பு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும்,  விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்  என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

 

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடியது.  முதல்வர் பழனிச்சாமி தலைமையில் 2 மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்,  7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்