2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, "அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்துத் தலைமைக் கழகம் முறையாக அறிவிக்கும். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்". இருப்பினும் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர் என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில்
''தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! தொடர்ந்து 3-ஆவது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!'' இவ்வாறு கூறியுள்ளார்.