Skip to main content

நக்கீரன் கோபாலிடம்  ‘மிரட்டல்’ விசாரணை! சி.பி.சி.ஐ.டி. போலீஸின் அத்துமீறல்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

 

பொள்ளாச்சி விவகாரத்தில் விசாரணை என்கிற பெயரில்... மிரட்டியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.

 

g

 

பொள்ளாச்சி  கொடூர பாலியல் வன்முறை தொடர்பாக நக்கீரன் தொடர்ந்து புதிய ஆதாரங்களை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இந்நிலையில், பொள்ளாச்சி காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்பிறகும், அந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தொடர்ந்து கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி வந்தனர்.

 

g

 

இதனையடுத்து, நக்கீரன்கோபால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், 'சென்னையில் இருக்கும் பத்திரிகை ஆசிரியரை கோவைக்கு அழைப்பதன் காரணம் என்ன? உண்மையிலேயே விசாரணை ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே?' என்று கூறி சென்னையில் 2019 ஏப்ரல்-1 ந்தேதி அவரை விசாரிக்கலாம் என்றும் மேற்குறிப்பிட்ட இரண்டு வழக்குகளைத் தவிர வேறு எந்த வழக்கு குறித்தும்  அவரிடம் விசாரிக்கக்கூடாது என்றும் நக்கீரன்கோபால் அன்றைய தேதியில் ஆஜராகி போலீஸார் கேட்கும் ஆவணங்கள் இருக்குமாயின் அதை தரலாம் என்றும் அவரை துன்புறுத்தாமல் இந்த விசாரணை நடைபெறவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

 

g

 

இதனைத் தொடர்ந்து இன்று (01-04-2019) மாலை 2:50 மணிக்கு சென்னை எழும்பூரிலுள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார் நக்கீரன் கோபால்.  இவருடன் சென்ற வழக்கறிஞர்கள் இளங்கோவன், சிவக்குமார், வெங்கடாஜலபதி ஆகியோரை வேறொரு அறையில் இருக்கும்படி கூறிவிட்டு,  சாட்சியான நக்கீரன் கோபாலை மட்டும்  தனி அறையில் வைத்து குற்றஞ்சாட்டப்பட்டவரைப்போல் விசாரித்திருக்கிறார்கள் எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீஸார்.  

 

g

 

கிட்டத்தட்ட, 4 மணி நேரத்துக்கு மேலான விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த நக்கீரன் கோபால்,  சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்  பத்திரிகை ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “இவ்வளவு கொடூரமான பாலியல் கொடூரத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது நக்கீரன். ஆனால், ஏன் வெளிக்கொண்டு வந்தீர்கள்? என்று கேட்பதுபோல் இருந்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸின் விசாரணை.  அதுவும், 1200 க்குமேற்பட்ட வீடியோக்கள் எங்கே?  இதை, யார் உங்களுக்கு கொடுத்தது?  பெயர் மறைத்து வெளியிட்டுள்ள இளம்பெண்களின் பெயர்கள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.ஏற்கனவே புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்டதால்தானே எஸ்பி பாண்டியராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ளார்.

 

g

 

பத்திரிகை தர்மத்தின் அடிப்படையில் யார் தகவலைக் கொடுத்தார்கள் என்று சோர்ஸை காட்டிக்கொடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.   நாங்கள் கேட்குற கேள்விகளுக்கு பதில் சொல்லலைன்னா  என்ன ஆகும் தெரியுமில்ல என்று மிரட்டல் தொனியில் கேட்டார் ஒரு டி.எஸ்.பி.  ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு பதம் என்பதுபோல் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரங்களுக்கு ஒரு வீடியோவே சாட்சி. அந்த பெண்ணின் கதறல் வீடியோவைப் பார்த்தபிறகும்கூட எப்படி இப்படியெல்லாம் என்னிடம் கேட்கத் தோன்றுகிறது என்று  விசாரணை பெண் போலீஸாரிடம் கேட்டேன். அவர்கள்,  எழுப்பிய கேள்விகள் என்னை மன வேதனை அடைய வைத்தது.  ஏழு வருடங்களாக நடக்கிறது என்று எழுதியிருக்கிறீகளே உங்களுக்கு எப்படி தெரியும்?  இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்பியது... அந்த குற்றவாளிகளை மட்டுமல்ல அவர்களுக்கு பின்னால் இருக்கும் பெரிய ஓநாய்களையும் காப்பாற்றுவதுபோல் இருந்தது விசாரணை.

 

g

 

ஒரு பத்திரிகை செய்தி வெளியிடுகிறது என்றால் அதன் பின்னணியை விசாரிக்கவேண்டியது போலீஸ்.  ஆனால்,  உண்மை செய்தியை வெளியிட்ட எங்களையும்  எனது தம்பிகளையும் மிரட்டி இனி  பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த செய்தி வெளிவரக்கூடாது என்று மிரட்டுவதுபோல் இருந்தது சி.பி.சி.ஐ.டி. விசாரணை.  சட்டம் தெரியாமலா 31 வருடங்களுக்கு மேலாக பத்திரிகை நடத்திக்கொண்டிருக்கிறோம்? உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 4 மணிநேரத்துக்குமேலாக என்னை துன்புறுத்துவதுபோல் கேள்வி எழுப்பினார்கள். வரும்  3-ந்தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று இன்னொரு சம்மனைக் கொடுத்தார்கள். அவ்வளவு சீக்கிரம் ஆவணங்களை தர இயலாது. எங்களிடம் உள்ள ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்” என்றார் வேதனையுடன்.


 

g

 

ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் அனுப்பிவிட்டு ஆவணங்களைக் கொடுத்தது யார்? தகவல் கொடுத்தது யார்? என்று ஆசிரியர் நக்கீரன் கோபாலை  விசாரித்திருப்பது பொள்ளாச்சி பாலியல் கொடூரன்களை காப்பாற்றுவதுபோல் உள்ளது.

 

மேலும், கைது செய்யப்பட்ட நான்கு பேரை மட்டுமே வைத்து  அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருக்கும் சிபிசிஐடி போலீஸ் நக்கீரனிடம் வேறு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா என்று சோதனையிடவே இப்படி ஒரு விசாரணையை செய்திருக்கிறது என்பது  தெரியவருகிறது.   சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்கை இன்னும் சிபிசிஐடி போலீசே விசாரிப்பதன் உள்நோக்கம் தற்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்