Skip to main content

துரோகிகள் வெளியேறுவதால்...! குஷ்புவுக்கு தமிழக மகிளா காங். தலைவர் பதிலடி!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

Sudha State President at TamilNadu Mahila Congress

 

துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு அவர்களே விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூற விரும்புகிறேன் எனத் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர். சுதா கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சி மாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியிருக்கிறார் குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?

 

காங்கிரசில் இணைந்தபோது என்னென்ன மரியாதை எல்லாம் தரப்பட்டது நினைவிருக்கிறதா? அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இணைந்தீர்கள். ஆனால், இன்று உங்கள் நிலைமை என்ன? இரண்டு நாட்களுக்கு முன்பு அத்தனை ஆரவாரத்தோடு பா.ஜ.க.வில் இணைய டெல்லி சென்ற உங்களை யார் வரவேற்றார்கள்? பத்தோடு பதினொன்றாக உங்களை இணைத்த கட்சிக்காகவா தொண்டர்களின் இயக்கமான காங்கிரசை பழிக்கிறீர்கள்?

 

தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற உயரிய பொறுப்பை காங்கிரஸ் உங்களுக்கு அளித்ததே? இப்போது குஷ்புவுக்கெல்லாம் பதவி கொடுக்க முடியாது என பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவது கேட்கிறதா குஷ்பு?

 

சிந்திக்க தெரியாத கட்சி என்று கூறியிருக்கிறீர்களே? ஆறு ஆண்டுகளாக உங்கள் மூளை எங்கிருந்தது என்று நான் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ?


உழைப்பவர்களுக்கு பலன் கிடைப்பதில்லை என்கிறீர்களே? அடிமட்ட தொண்டர்களாக இருந்து இன்று காங்கிரஸ் சார்பாக சட்டமன்ற நாடாளுமன்றங்களை அலங்கரிக்கும் சகோதரிகள் ஜோதிமணி, விஜயதரணி, ரம்யா, ஹரிதாசை எல்லாம் உங்களுக்குத் தெரியாதா ?

 

பின் தங்கிய கிராமத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த நான் இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் எனப் படிப்படியாக உயர்ந்து இன்று மகளிரணி தலைவியாகி இருக்கிறேன். எல்லா காலகட்டத்திலும் எங்களைப் போன்றவர்களின் உழைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கிறதே தவிர ஒதுக்கியதில்லை, ஒடுக்கியதில்லை. ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் உங்களுக்கு அளித்த அதீத வாய்ப்புகளுக்கான நன்றி கொஞ்சமாவது இருக்கிறதா ?


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஊராட்சி தலைவர்களிடம் கேளுங்கள். ராஜீவ் காந்தி கொண்டு வந்த சட்டத் திருத்தத்தால் பதவி கிடைத்ததை சொல்வார்கள். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்பெறும் பெண்களிடம் கேட்டால் காங்கிரஸ் கட்சியினால் பொருளாதாரம் சுதந்திரம் பெற்றதை சொல்வார்கள்.

 

kushboo

 

பெண்களுக்கான வாய்ப்பு குறித்து பேசுகிறீர்களே, பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டில் நீங்கள் இப்போது சேர்ந்திருக்கும் பா.ஜ.க. கட்சியின் நிலைப்பாடு என்ன?

 

Ad

 

பிரதமர் மோடிமீது கொண்ட நம்பிக்கையால் பா.ஜ.க.வில் சேர்ந்ததாக சொல்கிறீர்களே, அசுர பலத்துடன் ஆட்சியிலிருக்கும் பிரதமர் மோடி மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாக்க முன்வருவாரா? உங்களால் அதனை வலியுறுத்த முடியுமா ?


ஹத்ராஸ் விவகாரத்தில் மோடியைக் கடுமையாக விமர்சித்து விட்டு மனசாட்சிக்கு விரோதமாகவே பேசினேன் என்கிறீர்களே, உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதனிடம் கேளுங்கள். உண்மை நிலையை அது உங்களுக்குச் சொல்லும்.

 

அழுத்தத்திற்கு உட்பட்டோ அல்லது எந்தப் பலனை எதிர்பார்த்தோ பா.ஜ.க.வில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள், அது உங்கள் விருப்பம். அதற்காக தொண்டர்களால் கட்டி எழுப்பப்பட்ட காங்கிரசை களங்கப்படுத்த முயலவேண்டாம். மேகங்களால் வானை கறைப்படுத்த முடியாது. சில மேகங்கள் விலகும்போது வானம் இன்னும் அழகாகவே காட்சி தரும். துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு அவர்களே, ஆறு ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தை மனசாட்சியோடு நினைவு கூர்ந்து விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூற விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தம்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Notice of struggle of 108 ambulance drivers across Tamil Nadu

கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தமிழகம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

திருச்சியில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர்  ஆர்.ராஜேந்திரன், “108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் திருச்சியில் அளித்த பேட்டியில், தமிழக முழுவதும் 1353, 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளது. சமீப காலத்தில் தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. எனவே இதனை மறைக்கும் நோக்கில் மேல் சிகிச்சை என்ற பெயரில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஆபத்து நேரத்தில் உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டம்,  ஒரு மருத்துவமனையில் இருந்து அடுத்த மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் விபத்து, பிரசவம், பாம்பு கடி உள்ளிட்ட ஆபத்து நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் உதவ முடியாத சூழல் ஏற்படுகிறது. தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு பல்வேறு காலங்களில் விடுமுறைகள் அளிக்கப்படுவதால் போதிய ஓட்டுனர்கள் இன்றி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே தமிழக அரசு கூடுதலாக ஆம்புலன்ஸ்களையும், தேவைக்கேற்ற ஓட்டுனர்களையும் பணியமர்த்த வேண்டும். இதுகுறித்து அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத்து வருகிறோம். ஆனால் விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களே காரணம் என பொய்ச்செய்தி பரப்பப்படுகிறது.  மேலும் தனியார் நிறுவனமும் எந்தவித சட்ட விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை.  தொழிலாளர்  நீதிமன்றங்களின் ஆணைகளை தொழிலாளர் ஆணையர்கள் அமுல் படுத்துவதில்லை. தொழிலாளர் நலனுக்கு விரோதமாக செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக சுகாதாரத் துறை செயல்படுகிறது. இதனைக் கண்டித்து தமிழகம் தழுவிய போராட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஈடுபட உள்ளனர்” எனக் கூறினார்.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1353 ஆம்புலன்ஸ்கள் உள்ளது.  இதில் 900 ஆம்புலன்ஸ் மட்டுமே இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Chance of rain in 17 districts

நேற்று முன்தினம் புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.