
கோடை விடுமுறையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழாவானது கொண்டாடப்படும். இந்த கோடை விழாவின் ஒரு பகுதியாக மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படும் மலர் கண்காட்சியானது வரும் 15ஆம் தேதி (15.05.2025) முதல் 25ஆம் தேதி (25.05.2025) வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்த ஆண்டு நடைபெற உள்ள மலர் கண்காட்சியானது 5 நாட்களிலிருந்து 10 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி மலர் கண்காட்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (12.05.2025) ஊட்டிக்குச் செல்ல உள்ளார். அதாவது நாளை காலை 10 மணிக்குச் சென்னையில் இருந்து கோவைக்குப் புறப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மதியம் கோவை செல்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து சாலை வழியாக ஊட்டிக்குச் செல்கிறார்.
இதனையடுத்து 15ஆம் தேதி அந்த ஊட்டி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட உள்ளார். அதனைத் தொடர்ந்து 16 அல்லது 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 4 நாட்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊட்டியில் தங்கி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதிலும் குறிப்பாகப் பொதுமக்களுக்குப் பட்டா வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பட்டா வழங்க உள்ளார். மேலும் தொட்டப்பெட்டாவில் வசித்து வரும் பழங்குடியின மக்களைச் சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாட உள்ளார்.