உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் துணை குடியரசுத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவிடம் வழங்கியுள்ளனர்.
![Dipak](http://image.nakkheeran.in/cdn/farfuture/qeGhXDm2sr9S582hawjjcNUeiijr1U5wql8eTTA-OK8/1533347626/sites/default/files/inline-images/Dipak.jpg)
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான வழக்கை விசாரித்துவந்த நீதிபதி லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திருமண விழாவொன்றில் தீடீரென மரணமடைந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கூறிவந்த நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என பொதுநல வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி லோயா மரணத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனக்கூறிய நீதிபதிகள், அவரது மரணம் இயற்கையானது என அறிவித்து பொதுநல வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.
இந்தத் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட நிலையில், இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் துணை குடியரசுத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவிடம் வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ‘தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவின் செயல்பாடுகளில் இருக்கும் ஐந்துவிதமான தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி மனு வழங்கியிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தின் படி 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் கையெழுத்து இருந்தாலே போதுமானது. ஆனால், நாங்கள் 71 பேரின் கையெழுத்து அடங்கிய மனுவை வழங்கியிருக்கிறோம். இதுதொடர்பாக மேலும் ஆதரவு திரட்டி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.