மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவை அடுத்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இணையதள சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் இன்று காலை வரை 12 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைதொடர்ந்து, இன்று காலை முதல் தூத்துக்குடியில் போலீசார் பொதுமக்களிடையே மீண்டும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதில் போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி கலைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். தொடர்ந்து, இன்று பிற்பகல் அண்ணாநகர் பகுதியில் போலீசார் போராட்டகாரர்களிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது பொதுமக்கள் கல்வீச்சில் தூத்துகுடி மாவட்ட எஸ்.பி. மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கல்வீச்சை தொடர்ந்து போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்று சூழல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தகவல்கள் உடனுக்குடன் பரவுவதால் இதனை தடுக்கும் போக்கு, மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவின் பேரில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கத்தால் வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.