மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அதிக இடங்களை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியால் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் வந்த நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, கடந்த 5ஆம் தேதி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தேவேநந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்.
இதையடுத்து, மகாயுதி கூட்டணி கட்சித் தலைவர்களான, சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் (15-12-24) நாக்பூரில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தேவேந்திர பட்னாவிஸின் தலைமையிலான புதிய அமைச்சரவையில், 33 பேர் கேபினட் அமைச்சர்களாகவும். 6 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
அதில், பா.ஜ.கவை சேர்ந்த 16 பேருக்கு அமைச்சர் பதவியும், 3 பேருக்கும் இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. சிவசேனாவுக்கு 9 கேபினட் அமைச்சர்கள், 2 இணை அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸுக்கு 8 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மகாயுதி கூட்டணி கட்சி மூத்த தலைவர்களான பலருக்கும் அமைச்சர் வழங்காமல் புதுமுகங்களுக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது கூட்டணி கட்சிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சகன் புஜ்பால், திலீப் வால்சேபாட்டீல், பா.ஜ.கவைச் சேர்ந்த சுதிர் முங்கண்டிவார், விஜய்குமார் காவிட், ரவீந்திர சவான் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தானாஜி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், நரேந்திர போண்டேக்கர் ஆகியோரை ஒதுக்கி வைத்து புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் எதிரொலியாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ சகன் புஜ்பால், இனி சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அமைச்சர் பதவி வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.ஏவாக பதவியேற்று சிவசேனாவுக்கு ஆதரவு அளித்த நரேந்திர போண்டேக்கர், “தேர்தலில் வெற்றி பெற்றால் கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் சிவசேனா உறுதி அளித்தது. இதனால், சிவசேனாவில் சேர்ந்தேன். அமைச்சரவை விரிவாக்கத்தில் எனக்கு பதவி வழங்கவில்லை. இதை கண்டித்து சிவசேனா துணை தலைவர் பதவி மற்றும் கிழக்கு விதர்பா மாவட்டங்களின் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்று அறிவித்துள்ளார். இதனால், சிவசேனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தில் மூத்த தலைவர்களுக்கு பதவி வழங்காததால், மகாயுதி கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.