நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், வடசென்னை - கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ. மணி, ஆரணி - எம்.எஸ். தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம். செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ. ராசா, வேலூர் - கதிர் ஆனந்த், கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண் நேரு, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்த பொதுக் கூட்டத்தில் முதலவ்ர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திருச்சி என்றாலே தி.மு.க.தான். திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். தி.மு.க.வினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. தேர்தல் என்பதாலே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தாலே பிரதமர் தமிழகம் வருகிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. தோல்வி பயம் பிரதமர் மோடியின் கண்களிலும் முகத்திலும் தெரிகிறது. பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். 10 ஆண்டுகால பா.ஜ.க. அரசுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க. அரசின் ஊழல்கள் வெளியே வரும்.
கடும் நிதி நெருக்கடியில் கூட தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியைக் கூட தர மறுக்கிறது. எவ்வளவு வாய்க்கொழுப்பு இருந்தா, மக்கள் வாங்கும் நிவாரணத் தொகையை பிச்சைனு சொல்வீங்க. மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல. அவர்களது உரிமை. உங்களது அரசியலுக்காக மக்களை இழிவுபடுத்துவீர்களா?. மக்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியவில்லையென்றால் ஏன் நிதியமைச்சர் பதவி வகிக்க வேண்டும். தமிழக ஆளுநரை வைத்து மாநில அரசை மிரட்டி பார்க்கின்றனர். தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது. பொன்முடியின் பதவியேற்பு மூலம் ஆளுநர் மாளிகையில் இருந்து தேர்தல் பயணம் தொடங்கியுள்ளது. ஆளுநரிடம் ஒரு மரியாதைக்கு பொக்கே கொடுத்துட்டு, ‘இங்கிருந்து பிரசாரம் தொடங்குகிறது’ என சொல்லிவிட்டு வந்தேன். அதற்கு அவரு, ‘பெஸ்ட் ஆப் தி லக்’னு சொல்லி அனுப்புனார். ராஜ் பவனில் தொடங்கிய இந்த பயணம் குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை போகும்.
பா.ஜ.க. செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகங்களை செய்து விட்டு தற்போது கூட்டணி முறிந்துவிட்டதாக நாடகமாடுகிறார். பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவை ஏன் இபிஎஸ் அழுத்தமாக எதிர்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமி வைத்துள்ள கள்ளக் கூட்டணி விரைவில் வெளியே வரும்” எனத் தெரிவித்தார்.