Skip to main content

மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Budget Session; Lok Sabha extension for one more day!

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்டது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசினார்.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவை அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சனிக்கிழமையான 10 ஆம் தேதி வரை மக்களவை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்ஜெட் உரையின் போது கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்