உன்னாவ் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் குற்றவாளி என சி.பி.ஐ. உறுதி செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சிறுமியின் சார்பில் காவல்நிலையத்தில் புகாரளித்தும், வழக்கைத் திரும்பப்பெறுமாறு நிர்பந்தித்த நிலையில், பலமுறை கொலைமிரட்டல்களும் சிறுமியின் குடும்பத்திற்கு விடுக்கப்பட்டன.
இந்நிலையில், சிறுமி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டு முன்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை, காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், தனது மாமாவின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக சிறுமி ஊடகத்தில் தெரிவித்திருந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது. மேலும், தன்மீதான வழக்கை கிடப்பில் போட உள்ளூர் காவல்துறையினரைப் பயன்படுத்தியது, முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் இருந்து தப்பியது, சிறுமி தரப்பு ஆதாரங்களை மிரட்டியது மற்றும் மறைத்தது ஏராளமான உண்மைகள் இதன்மூலம் வெளிவந்துள்ளன.