
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 2வது அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம், கேரளா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் என்.எல்.சி. 2வது அனல் மின்நிலையத்தில் இன்று (11.05.2025) அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதன் காரணமாக அந்த பகுதியை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதே சமயம் என்.எல்.சி. நிறுவனத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் முழுமையாகத் தீயைக் கட்டுப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து தண்ணீரைப் பீச்சி அடிக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு மற்ற இடங்களில் தீ பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல் உரிய விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.