7 தமிழர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உணர்வை ஆளுனர் மதிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், இந்த விவகாரம் மகிழ்ச்சியான முடிவை நோக்கி பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் காலவரையின்றி சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்க முடியாது என்பது தான் உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வாகும்.
பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், தீபக்குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு,‘‘ 7 தமிழர்கள் விடுதலை செய்ய பரிந்துரைத்து ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் என்ன? இது குறித்து தமிழக ஆளுனருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பாதது ஏன்?’’ என்று வினாக்களை எழுப்பியுள்ளது. இந்த வினாக்கள் தமிழக அரசை நோக்கி எழுப்பப்பட்டவை அல்ல... மாறாக, ஆளுனருக்காக எழுப்பப் பட்டவை என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது தான் உண்மை.
7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என ஆளுனரை நோக்கி நேரடியாகவே நீதிபதிகள் வினா எழுப்பியிருக்க முடியும். ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சில விஷயங்களில் ஆளுனருக்கு உத்தரவிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் தான், ஆளுனரிடமிருந்து தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடைகளை, தமிழக அரசிடம் மூலம் கேட்டு அறிய விரும்புவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதேநேரத்தில் ஆளுனருக்கு மற்றொரு உண்மையையும் நீதிபதிகள் உணர்த்தியுள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி தண்டனை குறைக்கும் பரிந்துரைகள் மீது ஆளுனர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான் என்றாலும், இதையே காரணம் காட்டி 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அழுத்தம் திருத்தமாக தமிழக அரசு வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உணர்வை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் புரிந்து கொள்ள வேண்டும்.
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி நீதியரசர் ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் தான் 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானம் செப்டம்பர் 9-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. ஆளுனர் நினைத்திருந்தால் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்திலோ முடிவு எடுத்திருக்க முடியும். ஆனால், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 522 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை அதன் மீது தமிழக ஆளுனர் முடிவெடுக்கவில்லை. அவ்வாறு முடிவெடுக்காமல் இருப்பதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இன்று வரை வெளியிடப்படவில்லை.
7 தமிழர்களும் தண்டனை அனுபவிக்காமல் தங்களை விடுதலை செய்யக்கோரவில்லை. மாறாக, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள், அதற்கும் கூடுதலாக 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் தான், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு ஆதரவாக இவ்வளவு நியாயங்கள் உள்ளன.
அதேநேரத்தில் 7 தமிழர்கள் விடுதலை குறித்த பரிந்துரை மீது 522 நாட்களைக் கடந்தும் ஆளுனர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் ஆளுனர் எதையும் சாதிக்க முடியாது. கடந்த காலங்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதம் செய்ததால், அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. தமிழக ஆளுனரின் காலவரையற்ற தாமதமும் அத்தகையதொரு சூழலுக்கு தான் அழைத்துச் செல்லும்.
எனவே, ஆளுனர் தேவையற்ற தாமதம் செய்யாமல் அரசியலமைப்புச் சட்டப்படியான அவரது கடமையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்படி ஆளுனருக்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.