
கலைஞர் நினைவிடம் நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மு.க.அழகிரி தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. இதில் கருப்புச் சட்டை அணிந்தபடி மகன் தயா, மகள் கயல்விழியுடன் மு.க.அழகிரி பங்கேற்றுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் மறைந்து 30வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி தலைமையில் அமைதிப்பேரணி நடைபெறுகிறது. இதற்காக கரூர், மதுரை, திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் மெரினாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் இருந்து தண்டையார்பேட்டை, அண்ணாநகர், வடச்சென்னை 3 பகுதிகளில் இருந்தும் ஆட்கள் குவிந்துள்ளனர். இதற்கான பாதுகாப்பு பணியில் 3 துணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் குவிந்துள்ள அழகிரியின் ஆதரவாளர்கள், மெரினாவின் சுற்றுவட்டாரப்பகுதிகள் முழுவதும் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளனர். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே இருந்து புறப்பட்டுள்ள அமைதிப்பேரணி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து தனது அரசியல் முடிவை அறிவிக்கப்போவதாக அழகிரி தெரிவித்துள்ளார்.