Skip to main content

மே 2 வாக்கு எண்ணிக்கை கூடாது; ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - கிருஷ்ணசாமி கோரிக்கை!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

kl;

 

தமிழகத்தில் அடுத்த வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமைத் தேர்தல் அதிகாரி சாஹுவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "உலகெங்கும் கரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது மிக அதிக அளவாக இருந்து வருகிறது. இன்று மிக முக்கியமாக குறிப்பாக தமிழக நலனுக்காக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சாஹு அவர்களை இன்று சந்தித்துப் பேசினேன். தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

தேர்தல் என்பதை நாம் யாரும் சாதாரணமாக பார்க்கக் கூடாது. உலகத்தில் எல்லா நாடுகளிலும், எல்லா மக்களுக்கும் வாக்குரிமை கிடையாது. ஜனநாயக நாட்டில் மட்டும்தான் அனைவருக்கும் வாக்குரிமை இருக்கிறது. அதன் மூலம் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் நாம் உறுப்பினர்களை தேர்வு செய்து வருகிறோம். அந்த உறுப்பினர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள். அவர்கள் மூலம்தான் மக்களுக்கு கிடைக்கின்ற அடிப்படை வசதிகள் கிடைக்கிறது. அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். எனவே இந்த வாக்களிப்பு என்பது ரகசியமாக இருந்திட வேண்டும். ஆசை வார்த்தைகளுக்கோ, அச்சுறுத்தல்களுக்கோ யாரும் அடிபணிந்துவிடக் கூடாது. 

 

இந்தமுறை தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம், பொருள் யாவும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் முதல்முறையாக தேர்தல் நடைபெற்ற அன்று வாக்குச்சாவடிக்கு முன்பு கவுண்ட்டர்கள் அமைத்து 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வாக்களர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களின் வாக்குகள், பணத்தால் பெறப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். எனவே தற்போது நடைபெற்றுள்ள இந்த தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்ற தேர்தல் இல்லை. ஊழல்படுத்தப்பட்டு நடைபெற்ற தேர்தலாகத்தான் இதை நான் பார்க்கிறேன். எனவே தேர்தல் ஆணையம் இதனை அனுமதிக்கக் கூடாது.

 

இதனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் ஆணையத்திற்கு இருக்கிறது. எனவே வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும். இந்தத் தேர்தலை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஆறு அல்லது ஒரு வருடங்களுக்கு ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" என்றார்.