Skip to main content

“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” -நேதாஜி கூறியதன் பின்னணி

Published on 15/08/2018 | Edited on 15/08/2018

நேதாஜியின் வாழ்வில் தமிழர்களின் பங்கு மகத்தானது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தியடிகளால் நிறுத்தப்பட்ட பட்டாமி சீதாராமய்யாவை எதிர்த்து நேதாஜி போட்டியிட்ட போது தமிழ்நாடு முழுமையாக அவருக்கு ஆதரவளித்து  அவர் வெற்றிக்கு வழிவகுத்தது. எஸ்.சீனிவாசய்யங்கார், எஸ்.சத்யமூர்த்தி, கு.காமராஜர், உ.முத்துராமலிங்கத்தேவர், ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் நேதாஜிக்கு உறுதுணையாக இருந்தார்கள். 

 

subash chandra bose

 

 




ஜெர்மனியில் நேதாஜி இந்திய சுதந்திரப்படையை அமைத்தபோது அதன் வானொலி நிகழ்ச்சிக்குப் பொறுப்பாளராக இருந்தவர் ஆளவந்தார் என்னும் தமிழரே. தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தமிழர்கள் ஒரு முகமாக நேதாஜியின் விடுதலைப்போராட்டத்திற்காக ஆதரவளித்தார்கள். அவரது படையில் அணியணியாக சேர்ந்தார்கள். அவர் நிதி கேட்டபோது அள்ளி, அள்ளி தந்தார்கள். 1946-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் நாள் சிங்கப்பூரில் நேதாஜி தனது சுதந்திர அரசை பிரகடனம் செய்தபோது கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலோர் தமிழர்களாக இருந்தார்கள். எனவேதான் நேதாஜி தன்னுடைய பேச்சை தமிழில் மொழி பெயர்த்தபோது பெரும் ஆரவாரம் எழுந்தது.  வேறு எந்த இந்திய மொழியிலும் அவரது பேச்சு மொழி பெயர்க்கப்படவில்லை. 



நேதாஜியின் நம்பிக்கைக்குரியவர்களாக பல தமிழர்கள் விளங்கி அவரது ராணுவத்திலும், அரசாங்கத்திலும் உயர் பதவிகளை வகித்தார்கள். கேப்டன் லட்சுமி ராகவன், மகாகவி பாரதியாரின் மைத்துனர் மகனான எஸ்.ஏ. ஐயர், மேஜர்- ஜெனரல் ஏ.டி.லோகநாதன், மேஜர் ஜெனரல் அழகப்பன், கேப்டன் ஜானகி தேவர், நேதாஜியின் தனி உதவியாளர் மேஜர் பாஸ்கரன், அவரது சமையல்காரர் காளி, ஈ.தே.ரா. ஒற்றுமைப்படை பயிற்சிப் பள்ளித் தலைவராக பணியாற்றிய என்.ஜி.சுவாமி ஆகியோர் அவர்களில் சிலர் ஆவர். 

 


தமிழர்கள் தனக்கு உறுதுணையாக நிற்பதைக்கண்ட நேதாஜி உள்ளம் நெகிழ்ந்தார். அதை மனம் விட்டும் கூறினார்: "அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும் என விரும்புகிறேன் என்றார்'' "நேதாஜி எங்கே' என்னும் நூ-ல் பழ. நெடுமாறன்.
 

 

 

 

Next Story

‘தென்னாட்டு ஜான்சி ராணி’ - கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை திறப்பு

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Statue of Anjalayammal inaugurated in Cuddalore

 

கடலூர் புதுநகர் பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

 

சுதந்திரப் போராட்டக் களத்தில் தவிர்க்க முடியாதவரும், ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிவாகப் போராடியவருமான அஞ்சலையம்மாள், வயிற்றில் கருவைச் சுமந்து போராடி சிறை சென்றார். பின்பு ஜாமீனில் வெளியே வந்து பிரசவத்தை முடித்துவிட்டு, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கைக்குழந்தையுடன் சிறைச் சென்றார். கடலூரில் மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்கள் கைது செய்துவிடாமல் தடுத்து காப்பாற்றினார் அஞ்சலையம்மாள். அதற்காக அவருக்குத் தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தி பட்டம் கொடுத்தார். 

 

இந்த நிலையில், அவரது சொந்த ஊரான கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கடலூர் புதுநகர் பூங்காவில் உள்ள சிலையைத் திறந்து வைத்தார். சிலை திறப்பு நிகழ்ச்சியில் கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அஞ்சலையம்மாளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

 

 

Next Story

மறக்கடிக்கப்பட்ட தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் - ஆளுநர் உத்தரவு

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

governor rn ravi said Forgotten Freedom Fighters Tamil Nadu should be identified

 

மறக்கடிக்கப்பட்ட தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு அவர்களைப்   பற்றிய   தகவல்களை  ஆவணப்படுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  

 

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய விடுதலைக்குப் பாடுபட்டு அங்கீகாரம் பெறாமல் போன   தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காணும்  முயற்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் முயல வேண்டும் என்று சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டிருந்தார்.    

 

இந்த நிலையில், வரலாற்றில் நினைவுகூரப்படாத தமிழ்நாட்டின்  சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து   அவர்களைப்   பற்றிய  தகவல்களை   ஆவணப்படுத்தும்படி ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.   இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் திரு.  ரவி எழுதியுள்ள கடிதத்தில், நாடு விடுதலை அடைந்ததன் மிகப்பெரும் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். நம்  சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நமது சுதந்திர போராட்டத்தின்  பெருமைமிகு வரலாறு கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் சாதனையைச்  சொல்கிறது. நீண்ட சுதந்திரப் போராட்டக் களத்தில் முன்னணி வீரர்கள் தவிர  பல   வீரர்கள்,   வீராங்கனைகள்   பற்றிய   வரலாறு   அறியப்படாமலேயே போனது. அவர்களை கௌரவப்படுத்தவும், அவர்கள்   வாழ்க்கையை  ஆவணப்படுத்தும்   கடமையும் நம் முன்   உள்ளது   என்று  கூறியுள்ளார்.

 

மேலும், நமது தமிழ்நாட்டில்   எண்ணற்ற   சுதந்திரப் போராட்ட   வீரர்கள்  அந்நியரை   இம்மண்ணை   விட்டு   விரட்ட  செயற்கரிய   தியாகங்களைச்   செய்துள்ளனர்.   இதில்   பலரது   தியாகங்கள்,   பங்களிப்புகள்   பொதுவெளியில்   அறியப்படாமலேயே   மறக்கடிக்கப்பட்டுள்ளன.   ஒரு  தேசம்   அதற்காக  உழைத்த   தியாகிகளின்   தியாகத்தை   அங்கீகரிக்காமல்  இருக்க   முடியாது.  நாட்டுக்காக   அவர்கள்   செய்த தியாகங்கள்   மற்றும்   போராட்டங்களை  எதிர்கால  தலைமுறை   அறிய   அவர்களைப்   பற்றிய   தகவல்களை  ஆவணப்படுத்துவது   நம்  கடமை.   இது   சம்பந்தமாக,   உங்கள் பல்கலைக்கழகத்தின்   எல்லைக்குட்பட்ட   பகுதிகளைச்   சேர்ந்த  அறியப்படாத  சுதந்திர போராட்ட   வீரர்களின்   வாழ்க்கை   மற்றும்   பங்களிப்புகளை  அடையாளம்   கண்டு   ஆவணப்படுத்த   குறைந்தபட்சம்   5  சிறப்பு   ஆராய்ச்சி  மாணவர்களை   நீங்கள்   நியமிக்க வேண்டும்   என்று   விரும்புவதாக  ஆளுநர்  கடிதத்தில்   குறிப்பிட்டுள்ளார்.  

 

பொருத்தமான ஆராய்ச்சி   மாணவர்கள்  குறைந்தது   ஒரு   அறியப்படாத   சுதந்திர   போராட்ட   வீரரை   அடையாளம்  கண்டு,   அவர்  குறித்து   ஆராய்ச்சி   செய்ய   வேண்டும்.   இந்த  ஆராய்ச்சித் திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும்.   இத்திட்டத்தை முடிக்க ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படலாம், அதன் முடிவில் ராஜ் பவனில் நடைபெறும் விழாவில் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி மாணவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரர்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் மாணவர்களுக்கு பெருமையாகவும் இருக்கும்.    இந்த ஆராய்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்து அவ்வப்போது தனக்கு விளக்கமளிக்கும் படியும் ஆளுநர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.