Skip to main content

"ரஜினிய பார்க்கும்போதெல்லாம் உங்களைப் பார்க்கிற நினைப்பு...” எம்.ஜி.ஆர் - மகேந்திரன் உறவு 

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

இயக்குனர் மகேந்திரன் இன்று காலை தன் கடைசி சுவாசத்துடன் உலக வாழ்வை முடித்துக்கொண்டார். அவர் உருவாக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவென்றாலும் அவை உண்டாக்கிய தாக்கம் மிகப்பெரியது. அவர் எம்.ஜி.ஆரால் தமிழ்த்திரையுலகுக்கு அழைத்துவரப்பட்டவர் என்பது பலரும் அறிந்தது. அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள உறவு குறித்து அவரே எழுதிய புத்தகம் 'மக்கள் திலகம்... சினிமாவில் என்னை விதைத்தவர்'. நெகிழ வைக்கும் நிகழ்வுகள், மகிழ வைக்கும் நினைவுகள் நிறைந்தது அவர்கள் உறவு. புத்தகத்தில் மகேந்திரன் எழுதியதிலிருந்து ஒரு பகுதி...

 

mgr with mahendran



1980 மே மாதம் தொடங்கி மூன்று மாதங்கள் அவரது அமைச்சரவை கலைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு நாள் "இதயம் பேசுகிறது' மணியன் எனக்கு போன் பண்ணினார். "முதல்வர், உங்களின் 'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்' இரண்டு படங்களையும் பார்க்க விரும்புகிறார். நாளைக்கு நடிகர் சங்கத் தியேட்டரில் அவர் 'முள்ளும் மலரும்' பார்க்கிறார். நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்'' என்றார்.

என் பெருமைக்குரிய அண்ணனை அவர் விருப்பத்தை நிறைவேற்றிவிட்ட அவரது தம்பியாய் மறுநாள் அண்ணனையும் திருமதி ஜானகி அம்மையாரையும் முன்னால் நின்று வரவேற்றேன். "அண்ணே, நீங்க எனக்காகப் பட்ட கஷ்டங்கள், முயற்சிகள் வீண் போகவில்லை. நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி மற்றவர்களிடமிருந்து ஒரு மாறுபட்ட இயக்குநராக நான் இன்று பேசப்படுகிறேன். ஆனால், அப்படி மற்றவர்கள் சொல்வதைவிட நீங்கள் சொல்வதே எனக்குப் பெருமை...'' என்றேன்.

"மகேந்திரன், இந்த இரண்டு படங்களைப் பார்த்த அனைவரின் அபிப்பிராயங்களையும், பத்திரிகை விமர்சனங்களையும் கேட்டும் படித்தும் பூரித்துப் போயிருக்கிறேன்; இப்போதும் பழைய மகேந்திரனாக, அதே எளிமையோடும், அடக்கத்தோடும் நீங்கள் இருப்பதையே நான் அதிசயமாகப் பார்க்கிறேன். நீங்கள் இப்படியே இருக்க வேண்டும். என்றும் உங்கள் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது'' என்றார். அன்று இரவு எனக்கு "பூட்டாத பூட்டுக்கள்' எடிட்டிங் இருந்தது. படம் தொடங்குமுன், அவரிடம் போய் அதைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டபோது, "போயிட்டு வாங்க. வேலைதான் முக்கியம். நான் சொன்னபடி மனசுக்கும் உடம்புக்கும் அப்பப்ப ஓய்வு கொடுக்க மறக்காதீங்க'' என்று சிரித்துக்கொண்டு கேட்டார்.

 

kaali rajinikanth



"நீங்கள் சொல்லிக் கொடுத்ததை நான் மறக்கவில்லை'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். மறுநாள், 'உதிரிப் பூக்கள்' படத்தைப் பார்க்க துணைவியாருடன் வந்திருந்தார். அவர்கள் இருவர் மட்டும்தான். என்னைக் கண்டதும் அவசரமாக என் கைகளைப் பற்றிக்கொண்டவர், முந்தைய நாள் பார்த்த 'முள்ளும் மலரும்' குறித்து பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கிடப் பேசத் தொடங்கினார். சினிமா, அரசியல் இரண்டிலுமே எக்காலமும் மறக்க முடியாத சரித்திரம் படைத்த அவர் எனது முதல் திரைப்பட இயக்கத்தைப் பற்றி மனம் திறந்து பாராட்டியதை என்னால் எப்படி மறக்க முடியும்?

அவர் பாராட்டியது இப்படித்தான்:

"மகேந்திரன்... எனக்குப் பேசிட வார்த்தைகள் வரவில்லை. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியிருக்கிறீர்கள். என்னைப் போன்றவர்களால் ஆசைப்பட்டாலும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருக்கிறீர்கள்... பத்திரிகை பாராட்டியது இருக்கட்டும். இப்போது நான் சொல்கிறேன். சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதை இந்தப் படத்தின் மூலமாக பொட்டில் அறைந்த மாதிரி சொல்லி மகத்தான வெற்றியும் கண்டிருக்கிறீர்கள். அன்றைக்கு அழகப்பா கல்லூரியில் என் முன்னால் ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று பேசினீர்கள். அதை இன்றைக்குச் செயல் மூலம் நீங்களே நிரூபித்துக் காட்டிவிட்டீர்கள். சினிமாவில் 'டூயட்' பாடுவது யதார்த்தத்திற்கு எதிரான அபத்தம் என அன்றைக்குப் பேசினீர்கள். இன்று, அந்த அபத்தம் இல்லாமல் படம் எடுத்து ஜெயித்திருக்கிறீர்கள்.

ரஜினி முதல் அத்தனை நடிகர்களையும் மிக யதார்த்தமாக நடிக்க வைத்து அதுவும் மிகக் குறைவான வசனத்தாலும் பல காட்சிகளில் வசனமே இல்லாமலும்கூட அத்தனை பேரையும் அற்புதமாக நடிக்க வைத்து என்னைக் கலங்கடித்து விட்டீர்கள். இதற்கு முன்னால் அண்ணன் தங்கை பாசத்தை வைத்து தமிழில் வந்த படங்கள் எல்லாம் நாடகத்தனமாக இருந்தன, நான் நடித்த படம் உள்பட. 'முள்ளும் மலரும்' படம்தான் பழைய பாணி படங்களிலிருந்து முழுக்க முழுக்க விலகியும், நிஜத்தில் உயர்ந்தும் நிற்கிறது. அதுவும் படத்தின் கடைசிக் காட்சி தமிழ்ச் சினிமாவுக்கு மட்டுமல்ல; இந்திய சினிமாவிற்கே புதிது. தனக்குப் பிடிக்காத என்ஜினியருக்கு ஒரு தங்கையைக் கைப்பிடித்துக் கொடுத்த பிறகும்கூட "இப்படக்கூட உங்களை எனக்குப் புடிக்கலே சார்... ஆனா என் தங்கச்சிக்கு உங்களைப் புடிச்சிருக்கு' என்று ரஜினி சரத்பாபுவிடம் சொன்னபோது எனக்கே எழுந்து நின்று கைதட்டத் தோன்றியது... ரஜினி மிக மிக யதார்த்தமாகவும் அற்புதமாகவும் நடித்திருக்கிறார். இந்தப் படம் அவரது திரைப்பட வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையை அவருக்குக் கொடுக்கும்... படத்தில் நடித்த அனைவருமே யதார்த்த நடிப்பின் அழகை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்... இப்போது பார்க்கப்போகும் "உதிரிப்பூக்கள்' படத்தினைப் பற்றி நான் படித்தது கேட்டது எல்லாம் என்னைத்தான் பெருமைப்பட வைத்தன... என் மகேந்திரன் சாதாரண ஆள் இல்லை'' என்றார். "ஏதோ எனக்குத் தெரிந்ததைச் செய்தேன்" என்று நான் இரண்டுமுறை குறுக்கிட்டபோது, என் வாயை அடைத்துவிட்டார்... "தன்னடக்கம் போதும்... இதுவரை எவருக்கும் தெரியாதது உங்களுக்கு மட்டும் தெரிந்து செய்து தமிழ் சினிமாவை உயர்த்தியிருக்கிறீர்கள் என்றுதான் சொல்கிறேன்'' என்று மறுத்துப் பேசினார்.

 

rajini mahendran



தியேட்டருக்குள் நுழையும் முன் மீண்டும் திரும்பி நின்று என்னிடம் "மகேந்திரன்... படத்திலே ரஜினி நடிப்பை  பாக்குறப்ப எல்லாம் எனக்கு என்னமோ உங்களைப் பார்க்கிற நினைப்பு அப்பப்ப வந்துச்சு. "அனாதைகள்' நாடக ரிகர்சலின் போது நீங்கள் பாடத்தை (வசனத்தை) நடித்துக் காட்டும் போது உங்களிடம் நான் பார்த்த அதே முகபாவம், அப்படியே ரஜினியிடம் இருந்தது. "அதைக் கேட்டதும் எனக்கு விவரிக்க முடியாத வியப்பு... "அனாதைகள்' நாடக ஒத்திகையின்போது என்னை அவர் எவ்வளவு உன்னிப்பாய்க் கவனித்திருக்கிறார். இப்பேர்ப்பட்டவர் தனது அத்தனை படங்களையும் வித்தியாசமான வெற்றிப் படங்களாக்கி மக்கள் மனத்தில் 'எங்கள் வீட்டுப் பிள்ளையாக' திகழ்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? தமிழ்ச் சினிமாவின் முடிசூடா மன்னரான அவர் 'முள்ளும் மலரும்' பற்றிப் பாராட்டிய உன்னத அனுபவம் "திரைக்கதையின் முன்பகுதிக் காட்சிகளுக்கும் பின்பகுதி காட்சிகளுக்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டிய அவசியம்... அதுபோலத்தான் நமது வாழ்க்கையும்' என்று அவர் முன்பு சொன்னது இப்போது என் நினைவுக்கு வருகிறது.

'உதிரிப்பூக்கள்' படம் தொடங்குவதற்கு முன்பாக 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'ஜானி' படங்களிலிருந்து இரண்டு பாடல்களை மட்டும் அவருக்குத் திரையிட்டுக் காட்டினோம். பிறகு "உதிரிப்பூக்கள்' தொடங்கப்போகிறது... என்னைத் தன் அருகில் வந்து உட்காரச் சொன்னார். நானோ அவர்கள் இருவரும் தனித்த மன நிலையோடு படத்தைப் பார்க்கட்டும் என்று கருதி முன் வரிசையில் ஓரமாய் உட்கார்ந்து கொண்டேன். படம் தொடங்கியது. திரை பரப்பிய வெளிச்சத்தில் அவ்வப்போது பின்னால் திரும்பி அவர்கள் இருவரையும் பார்த்தேன். கண்ணீரைத் துடைத்தபடி இருந்தனர்.

படம் முடிந்தது. இருவரும் வெளியே வந்தார்கள். என் தோளில் கை வைத்து அணைத்தபடி அண்ணன் எம்.ஜி.ஆர். அமைதியாக கார் வரை சென்றார். என்னிடம் எதுவும் பேசவில்லை. கார் நெருங்கி விட்டது. அவரும் காரின் கதவைத் திறந்து உட்காரப் போனார். நானோ அதற்கு மேலும் மனம் பொறுக்காமல், "அண்ணே... படத்தைப் பற்றி ஒண்ணுமே சொல்லாமப் போறீங்களே...' என்றேன். உடனே என் கைகளை இறுகப் பற்றிக் கொண்ட அவர், நா தழுதழுக்க, "மகேந்திரன்... ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் இன்னைக்குத்தான் நான் நிம்மதியாத் தூங்கப் போறேன்...' என்று சொல்லிவிட்டு காரில் உட்கார்ந்தார். கார் புறப்பட்டது.

அந்த ஒப்பற்ற மாமனிதர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கிறதை என்னால் உணர முடிந்தாலும், அண்ணன் அப்படிச் சொன்னதன் கருப் பொருளை இன்றுவரை என்னால் யூகிக்க முடியவில்லை.