Skip to main content

“இந்துப் பெண்களை மோசமாகப் பேசிவிட்டார் என்றனர், ஆனால் ஆதரவுதான் பெருகியது” - கவிதா கஜேந்திரன் 

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

kavitha gajendran interview about udhayanidhi speech and sanatana dharmam

 

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து நாம் ஊடகவியலாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் கவிதா கஜேந்திரனை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நமது கேள்விகளுக்கு அளித்த பதில்களை சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்...

 

தமிழிசை சொல்கிறார் சனாதனம் பற்றி பேசினால் அது வளரும்.... சனாதனம் குறித்து புரிதல் இல்லை....?

அவருக்கும் புரிதல் இல்லாமல் இல்லை. நமக்கும் புரிதல் இல்லாமல் இல்லை. நாம் தெளிவாக உள்ளோம் இந்த முறைகள் நம்மை மேம்படவிட வில்லை என்பதில். ஆனால், தமிழிசை யாருக்காக பேசுகிறார், கடந்த காலங்களில் பார்ப்பனர்கள் சூத்திரர்களை வைத்தே எல்லா விசயங்களையும் செய்வர். அதன்படி தான் தமிழிசை இயங்குகிறார்.

 

சனாதனத்தை விமர்சிப்பவர்கள் அனைவரும் அதனைத் தெரிந்துகொண்டே தான் பேசுகிறார்களா...?

 

தமிழிசை பேசுவதின் நோக்கமும், அதனால் அடையும் லாபத்தையும் வைத்து இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், பார்ப்பனர்கள் அனைத்து காரியங்களிலும் சூத்திரர்களை வைத்தே சூத்திரர்களை அடிக்கும் வேலையை செய்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கூட நான் 'சௌகிதார்' இந்தியாவின் வேலைக்காரன் என்று பேசினார். தொடர்ந்து, வலது சாரி அமைப்புகள் பாஜகவினர் பெரும்பாலும் தங்களை சௌகிதார் என அழைத்துக்கொண்டனர். ஆனால், சுப்ரமணிய சாமி, ‘நான்(பிராமணன்) எப்படி சௌகிதாராக இருக்க முடியும். அவர்தான் சௌகிதாரக இருக்க முடியும்’ என்றார். எனவே, இந்த பார்வையை தான் ஆர்.எஸ்.எஸ்., மோடி,அமித் ஷா, தமிழிசை மீதும்  வைத்துள்ளது.  

 

அவர்களின் கூற்றுப்படி, தங்களின் இலக்கை அடைய இவர்களை பயன்படுத்திக் கொள்வர் என்பதே. இப்படியிருக்க, இந்தியாவில் பிராமணர்களின் சதவிதம் 3-4% தான். அவர்கள் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினர். இருந்தும் அவர்கள் இந்தியாவின் அனைத்து துறைகளிலும் உள்ளனர். மேலும், இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கம் உள்ள இடங்களில் நாம் நுழைய முடியுமா? ஏன் நான் முதல் தலைமுறை பட்டதாரி, என்னால் ஐ.ஐ.டி யில் போக முடியுமா? சமீபத்தில் நடந்த கற்பழிப்பு விவகாரத்தை விசாரிக்கவே செல்ல முடிந்தது. எனவே நமக்கெல்லாம் இவ்வளவு தான் அனுமதி உண்டு. இன்று ஊடகம் தொடங்கி அரசின் அனைத்து நிறுவனங்களிலும் ஏன் தனியாரும் பெருமளவில் பார்ப்பனர்களின் கைகளிலே உள்ளது. முடிவெடுத்தலில் முதன்மையாக பார்ப்பனர்கள் இருப்பதனால் மீதமுள்ளவர்களை அடியாட்களாக பயன்படுத்துகின்றனர். 

 

உதாரணத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு முன்பு இந்து மகா சபா இருந்தது. ஆனால், நமக்கு தெரியாத இவர்களின் அடியாட்கள் அமைப்புகள் ஏராளம். இந்த அமைப்புகளின் அடியாட்கள் அனைவரும் சூத்திரர்களே. இவர்களை தான் பசுகாவலராகவும், கர்நாடகாவில் போலீஸ் போர்ஸ் எனவும் உபயோகிக்கின்றனர். ஆதலால், தமிழிசை இந்த இடத்தில் இருந்தே அப்படி பேசுகிறார். அவரைத் தொடர்ந்து குஷ்புவும் குரலாக ஒலிக்கிறார். மேலும், இஸ்லாமியர்களை சிறுபான்மை முகமாக வைத்து செயல்படுகிறார்கள். அவர்களின் செயல் வடிவம், சூத்திரர்களை வைத்து சூத்திரர்களை எதிர்ப்பது. இதனை பலநூறு வருடங்களாக செய்து வருகின்றனர்.

 

நம்பிக்கை, அன்பு, எல்லாரும் சமம் என்பதே சனாதனம்; இஸ்லாமியராகிய எனக்கே கோவில் கட்டினார்கள். இது தான் சனாதன தர்மம் என குஷ்பு கூறுவது?

அதாவது மானுடத்தை பேணுபவர்கள், மனித உரிமையை பேசுபவர்கள் இதுபோன்று பேசுவார்களா? என யோசிக்க வேண்டும். இதனை கேட்பதன் காரணம், குஷ்பு கோவில் கட்டியதை பேசுகிறார். ஆனால், அவர் வீட்டில் உள்ளவர்களை கையால் மலம் எடுக்கும் தொழிலுக்கு அனுப்பிவைப்பாரா? இந்த வேலையை குறிப்பிட்ட சமூகம் தான் செய்யவேண்டும் என வித்திட்டது சனாதனம் தானே? மனுநீதி, வர்ணாஸ்ரமம், சனாதனங்கள் தானே இவைகளை தாங்கி நிற்கின்றது. இதை குறித்து குஷ்பு பேசியிருக்க வேண்டும். குஷ்பு தன்னை முற்போக்காளர், மானுடத்தின் அன்பு எனவெல்லாம் பேசுபவர், கையால் மலம் அள்ளுபவர்களை குறித்து பேசுவாரா? அது நியாயம் இல்லை. இதனை ஒழிக்க வேண்டும் என அவர் பேசுவாரா? ஆகவே, இவற்றையெல்லாம் பேசாதவர்கள் மானுடத்தை பற்றியும் அன்பை குறித்தும் பேச என்ன தகுதி இருக்கிறது. 

 

இந்த சமமின்மை இவ்வளவு பெரிய மனித சமூகத்திடம், (இந்தியாவில்) இருப்பது போன்று பிறப்பில் உயர்வு, தாழ்வு கருதுவது உலகில் எங்கும் இல்லை. எனவே, இதை பற்றிப் பேசாதவரால் எப்படி மானுடத்தை குறித்து பேச முடியும். மேலும், அவர் நடிகையாக இருந்த போது கோவில் கட்டினார்கள் என சொல்வதே முட்டாள் தனமாக உள்ளது. அது முழுவதும் பண விரயம் என்று சொல்லியிருக்க வேண்டும்.

 

சனாதன ஒழிப்பை எதிர்ப்பவர்கள் கேட்கிறார்கள்... முன்னொரு காலத்தில் விநாயகர் சிலையை உடைத்தீர்கள்.. ராமர் படத்தை செருப்பால் அடித்தீர்கள்... இப்போது செய்ய முடியுமா? நீங்களே உங்கள் நிலைப்பாட்டில் சரியாக இல்லை என்கிறார்கள்..?

முதலில் இந்து மதம் யாருடையது என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டில் நமக்கென்று இருக்கும் நம் தெய்வ வழிபாடுகள், கலாச்சாரம் போன்றவை உள்ளன. இவர்கள், பிள்ளையார் சிலையை உடைத்து. ராமர் படத்தை கிழித்தது என பெரியாரை சொல்கிறார்களா? இதெல்லாம் பேசும் இவர்கள் தான், ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றைக்கும், மகாத்மா காந்தியை படுகொலை செய்த சம்பவத்தை ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தி ஊர்வலம் செய்கிறீர். இதற்கு என்ன பதில் கூறுவீர்கள்?

 

இந்த சாதியை கொண்டு மதம், மக்களை புத்தி சலவை செய்துவருகிறது. முட்டாளாக, அடிமையாக வைத்துள்ளளது என்பதை எதிர்க்கும் வேலையை, தந்தை பெரியார் செய்தார். உங்களின் நூல்களில் இருக்கும் விசயங்களை குறிப்பிட்டு தான் பெரியார் எதிர்த்தார். ஏன், இரண்டு வருடங்களுக்கு முன்பு தொல்.திருமாவளவன், மனுநீதி புத்தகம் பெண்களை எந்தளவு இழிவாக பேசுகிறது என எடுத்துக் கூறினார். அதில், பெண்கள் சுயமாக சிந்திக்க முடியாது என்றும், ஒரு பெண் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அடிபணிந்து போக வேண்டும் என உள்ளது. மேலும், நிறைய கொச்சையான விஷயங்கள் சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. இதனை பேசிய திருமாவளவனை, இந்து மதத்தை எதிர்த்து பேசிவிட்டார்.. இந்து பெண்களை மோசமாக பேசிவிட்டார் என பொய்ப் பிரச்சாரம் செய்தீர்கள். பின்னர், அனைத்து மகளிர் அமைப்புகளும் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

 

இதே பிரசாரத்தை தான் இவர்கள் உதயநிதி பிரச்சனைக்கும் செய்கிறார்கள். இந்த விசயங்களை பேசாமல், எதிர்ப்பதை பிரச்சனையாக பார்கிறீர்கள். இதனையெல்லாம், எதிர்க்கவே செய்வார்கள். இத்துனை வருடங்களாக எங்களை அடிமைப்படுத்தியுள்ளனர். இன்றைக்கு அந்த சங்கிலிகளை உடைத்து விட்டு பெரியாரின் வழியில் நாங்கள் வருகிறோம். ஆகவே, பெரியாரின் வழிமுறைகள் எல்லாம் உங்களுக்கு வலிக்கவே செய்யும். அதனை நீங்கள் குற்றமாகவே கருதுவீர்கள். தொடர்ந்து, " இந்துக்களுடைய நாடு, இந்து பெரும்பான்மை நாடு என்றெல்லாம் பிரச்சாரங்கள் வரும்" இதனை எதிர்கொள்ள வேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்