Skip to main content

ஊர்கள்தோறும் ‘உசைன் போல்ட்’டுகள்!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

விளையாட்டுப் போட்டிகளில் சாதனை என்பது சர்வதேச அங்கீகாரம் பெற்ற விளையாட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. உள்ளூர் விளையாட்டுகளை உலகம் கண்டு கொள்வதில்லை. அதனால்தான்  ஒலிம்பிக் தொடங்கி காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் ஒவ்வொரு முறையும் உள்ளூர் பாரம்பரிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. இந்தியாவின், அதுவும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சடுகுடு எனும் கபாடி போட்டி ஆசிய விளையாட்டுப் போட்டி சேர்க்கப்பட்டதன் பின்னணியில் பெரும் முயற்சிகள் அடங்கியுள்ளன.
 

srinivasa gowda

 

 

பெரிய-பணக்கார நாடுகள், சர்வதேசப் போட்டிகளில் இடம்பெறும் வழக்கமான விளையாட்டுப் போட்டிகளுக்கேற்ப தங்கள் நாட்டில் விளையாட்டு வீரர்களை உருவாக்கி, ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டுத் திருவிழாக்களில் பதக்கங்களை அள்ளுகின்றன. அமெரிக்காவின் பெரும்பான்மையான தடகள ஆட்டக்காரர்கள் கறுப்பின மக்களாகவே இருக்கிறார்கள். சீனா, ஜப்பான் போன்றவை தங்கள் நாட்டு வீரர்களுக்கு உரிய பயிற்சிகளை அளித்து, பதக்கங்களைக் குவிக்கின்றன. இந்தியாவில் அந்தளவுக்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கிரிக்கெட் மட்டுமே பட்டணம்  முதல் பட்டிக்காடு வரை விளையாடப்படும் ஆட்டமாக இருக்கிறது.

இந்நிலையில்தான், கர்நாடகாவில் ஓர் இளம் வீரரின் பாரம்பரிய விளையாட்டின் சாதனை ஊடகங்கள் வாயிலாக உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டைப் போல, கர்நாடகாவில் புகழ்பெற்றது கம்பாலா. நீரும் சேறுமான நிலத்தில் ஏரில் பூட்டிய எருமைகளை வேகமாக ஓட்டிச் செல்லவேண்டும். இதுதான் அந்த விளையாட்டு.

பிப்ரவரி 1 அன்று கர்நாடகாவின் கடலோரத்தில் உள்ள சிற்றூரான அஷ்வத்புரா என்ற இடத்தில் நடந்த கம்பாலா விளையாட்டில், சீனிவாச கவுடா என்ற இளைஞர், 142.5 மீட்டர் தூரத்தை 13.62 நொடிகளில் கடந்திருக்கிறார். எருமைகளை ஓட்டியபடி அவர் அதிவேகமாக கடந்த தூரத்தை உலகப்புகழ் ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டின் 100 மீட்டர் சாதனையுடன் ஒப்பிட்டால், சீனிவாச கவுடா 9.55 நொடிகளில் 100 மீட்டரை கடந்திருக்கிறார். உசைன் போல்ட் கடந்தது 9.58 நொடிகளில். சர்வதேச போட்டிகளின் நேரத்தைவிடவும் குறைவாக ஒரு கிராமத்தில் நடந்த போட்டியில் சத்தமில்லாத சாதனை படைத்திருக்கிறார் சாதாரண இளைஞர்.
 

usain bolt

 

 

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவரான உசைன் போல்ட், கறுப்பினத்தைச் சேர்ந்தவர். கடுமையான வாழ்க்கைச் சூழலில், சளைக்காத முயற்சிகளுக்குப் பிறகே உலக சாதனைகளைத் தொடர்ந்து படைத்தார். ஜமைக்கா ஒன்றும் பணக்கார நாடல்ல. அமெரிக்காவைப் போல பிறநாட்டு விளையாட்டு வீரர்களை பர்சேஸ் செய்யும் வசதியும் கிடையாது. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து உலகப்புகழ் பெற்ற வீரர் உருவாகியிருக்கிறார்.

இந்தியாவில் ஊர்கள் தோறும் உசைன் போல்ட்டுகள் இருக்கிறார்கள். அவர்கள் சீனிவாச கவுடாக்களாக உள்ளூர்ப் போட்டிகளில் வெளிப்படுகிறார்கள். ஆனால், இந்தியாவில் விளையாட்டுத்  துறை என்பது கவனிக்கப்படாத துறையாக இருப்பதாலும், எந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவது-யார் யாரைத் தேர்வு செய்வது, எப்படிப்பட்ட பயிற்சி அளிப்பது என்பது உள்பட அனைத்திலும் மதம், சாதி, மொழி, இனப் பாகுபாடு எனும் விளையாட்டு தனது ஆட்டத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த விளையாட்டு நீடிக்கும்வரை இந்தியாவின் உசைன் போல்ட்டுகளாக ஒவ்வொரு ஊரிலும் உள்ள சீனிவாச கவுடாக்கள் முடங்கியே கிடப்பார்கள்.  

 

 

Next Story

கம்பாளா வீரருக்கு உதவும் அரசு... மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்...

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

உலகின் மிகவேக மனிதர் என பெயர்பெற்ற உசைன் போல்டை விட வேகமாக ஓடிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஸ்ரீனிவாசகவுடா பயிற்சியளிப்பதற்கான உதவிகள் செய்யப்படும் என மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

 

kiren rijiju promises to helps indian usain bolt from karnataka

 

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோல கர்நாடகாவில் நடைபெறும் கம்பாளா ஓட்டப்பந்தயத்தில் கிட்டத்தட்ட 143 மீட்டர் தூரத்தை தனது எருதுகளுடன் அந்த இளைஞர் கடந்துள்ளார். தனது மாடுகள் சேற்றில் ஓடும்போது, அதன் கயிறுகளை பிடித்தபடி, அதன் பின் அந்த விளையாட்டில் பங்குபெறும் வீரர்களும் ஓட வேண்டும். அந்த சேறு நிறைந்த பாதையில் ஸ்ரீனிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடிக்கடந்து வெற்றி பெற்றார்.

இந்த கணக்கின்படி 100 மீட்டர் தூரத்தை கடக்க அவர் வெறும் 9.55 வினாடிகளே எடுத்துக்கொண்டுள்ளார். உசைன் போல்டின் 100 மீட்டர் உலக சாதனை 9.58 வினாடிகள் ஆகும்.  இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவிய சூழலில், இது போன்ற வீரர்களை அரசு சரியாக அடையாளம் கண்டு முறையான பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிறைய பதக்கங்களை குவிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதே கருத்தை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த பயிற்சியாளர்கள் மூலம் ஸ்ரீநிவாஸ் கவுடாவுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படும். ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தின் தன்மை, தரம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இந்தியாவில் திறமையான ஒருவரும் வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடாது என்பது உறுதி செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

உசைன் போல்ட் வேகத்தை மிஞ்சிய இளைஞர்...?

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

உலகின் மிகவேக மனிதர் என பெயர்பெற்ற உசைன் போல்டை விட கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக ஓடியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

karnataka man ran 143 meters in 13 seconds

 

 

ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் ஓட்டப்பந்தயத்தில் பல முறை உலக சாதனைகளை நிகழ்த்தி உலகின் மிக வேகமான மனிதர் என்று பெயர் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் இவர் நிகழ்த்திய சாதனைகளை இவரே மீண்டும் முறியடித்த வரலாறுகளும் உண்டு. இந்த சூழலில் இவரை விட வேகமாக கர்நாடக இளைஞர் ஒருவர் ஓடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோல கர்நாடகாவில் நடைபெறும் கம்பாளா ஓட்டப்பந்தயத்தில் கிட்டத்தட்ட 143 மீட்டர் தூரத்தை தனது எருதுகளுடன் அந்த இளைஞர் கடந்துள்ளார். தனது மாடுகள் சேற்றில் ஓடும்போது, அதன் கயிறுகளை பிடித்தபடி, அதன் பின் அந்த விளையாட்டில் பங்குபெறும் வீரர்களும் ஓட வேண்டும். அந்த சேறு நிறைந்த பாதையில் ஸ்ரீனிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடிக்கடந்து வெற்றி பெற்றார்.

இந்த கணக்கின்படி 100 மீட்டர் தூரத்தை கடக்க அவர் வெறும் 9.55 வினாடிகளே எடுத்துக்கொண்டுள்ளார். உசைன் போல்டின் 100 மீட்டர் உலக சாதனை 9.58 வினாடிகள் ஆகும்.  இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் சூழலில், இது போன்ற வீரர்களை அரசு சரியாக அடையாளம் கண்டு முறையான பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிறைய பதக்கங்களை குவிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.