அதிமுகவில் தலைமைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இது தொடர்ந்தால் வெற்றிவாய்ப்பு என்பது இல்லாமல் போய்விடும் என்று அதிமுக மூத்த உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரிய அளவிலான கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூத்த உறுப்பினர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கடுமையாக திட்டியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் குறித்து முன்னாள் நிர்வாகி மின்னல் ரவி என்கிற மின்னல் வசந்த் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த செல்வி ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த இடம் கொடநாடு. இந்த இடத்திற்குச் செல்லும்போது அவர் மன மகிழ்ச்சியாக இருப்பார் என்று அதிமுகவினர் சொல்வதுண்டு. அப்படி ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த ஒரு இடத்தில் மர்மான முறையில் கொலை, கொள்ளை நடந்து முடிந்துள்ளது. இதை அதிமுக தொண்டர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
ரொம்ப வருத்தமான விஷயம். ஜெயலலிதா அவர்கள் வீட்டிலேயே கொலை, கொள்ளை நடக்கிறது. முந்தைய எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஏதாவது இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளார்களா? தற்போதைய ஆட்சியில் இதுதொடர்பான விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகிறது. எங்கேயாது பைக் மோதி கார்ல வருகிறவர்களுக்கு பாதிப்பு வந்ததைப் பார்த்திருக்கீர்களா? ஜெயலலிதாவோட டிரைவர் இறந்திருக்கிறார், கொடநாட்டில் காவல் பணியில் இருந்த பகதூர் இறந்துள்ளார். ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுதொடர்பான எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஒரு கொலை நடக்கிறது, ஆனால் இத்தனை வருடம் ஆகியும் அதுதொடர்பான மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கனகராஜின் செல்ஃபோனை கூட எரித்திருக்கிறார்கள். நிச்சயம் தமிழக போலீஸ் இதுதொடர்பாக இன்னம் பல விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள். விரைவில் குற்றவாளிகளை அடையாளம் காண்பார்கள். தலைவருடைய பிறந்தநாள் வர இருக்கிறது, அதற்குப் பரிசாக குற்றவாளிகள் நிச்சயம் சிறை செல்வார்கள்.
இன்றைக்கு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை முந்தைய அதிமுக அரசு அரசுடைமையாக்கியது. தற்போது அது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்றைக்கு ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடைமையாக்கி உள்ளார்கள். என்ன காரணத்துக்காக அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா இல்லை, அதனால் அந்த வீட்டை அரசுடைமையாக்கி உள்ளோம் என்று கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அவர்கள் வீட்டை அரசுடைமையாக்க முன்வருவார்களா, அவர்கள் பசங்க விட்டுவிடுவார்களா? அந்த வீடு அம்மாவுக்குப் பிறகு யாருக்கு சொந்தமோ அவர்களுக்குச் செல்ல வேண்டும். எனவே இதில் இவர்கள் தலையிட உரிமை இல்லை. சசிகலா வரக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்த வீட்டை அவசர அவசரமாக அரசுடைமை ஆக்கினார்கள் என்பதே உண்மை.
இவர்கள் அனைவரும் அதிமுக என்ற கட்சியை நாசம் செய்துவருகிறார்கள். பதவி தரும்போது சின்னம்மா என்பது இல்லை, வேலைக்காரி என்று கூறுகிறார்கள். இவர்கள் யாரும் நன்றாக இருக்க மாட்டார்கள். அதுவும் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், சசிகலா யார், எனக்காகப் பிரச்சாரம் செய்தார்களா, இல்லை சீட் கொடுத்தார்களா என்று. அவர் மனசாட்சிக்கே தெரியும், அவரை இந்த இடத்தில் யார் கொண்டுவந்து அமர்த்தினார்கள் என்று. அரசியல் கால சூழ்நிலை நிச்சயம் ஒருநாள் மாறும். அப்போது இவர்கள் பேசிய பேச்சுகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை ஏற்படும்.
ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் சிறந்த நடிகர்கள். ஆனால் அதைவிட இவர்கள் மிகச் சிறந்த நடிகர்கள். ஜெயலலிதா முதல்முறையாக பெங்களூருவில் சிறைக்குச் சென்றபோது பதவியேற்றுக்கொண்ட இவர்கள், கண்ணீர்விட்டு கதறினார்கள். ஆனால் ஜெயலலிதா இறந்தபிறகு பன்னீர்செல்வம் பதவியேற்றபோது யாராவது அழுதார்களா? ஏன் அப்போது கண்ணீர் வரவில்லையா? எல்லாம் நடிப்பு. அழுவதை சிறைச்சாலையில் ஜெயலலிதா பார்த்தால் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும், கூடுதல் இலாக்கா கிடைக்கும் என்ற ஆசையில் போலி கண்ணீரை வடித்தார்கள். அவர்கள் பதவி தருவார்கள் என்றால் கண்ணீரில் குளிக்க கூட வைப்பார்கள். இவர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆரை விட ஆகச்சிறந்த நடிகர்கள். இவர்கள் அனைவரிடமிருந்தும் கட்சியை விரைவில் காப்பாற்ற வேண்டும்.