Skip to main content

“நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய நேரம்” - கனிமொழி எம்.பி. பேச்சு!

Published on 03/04/2025 | Edited on 03/04/2025

 

Kanimozhi MP says Time to answer to the people of the country

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பத்தை கண்டிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கருப்பு ஆடை அணிந்து கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மக்களவையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி பேசும் போது, “இந்த அவையில், மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இன்று நள்ளிரவு இரண்டு மணிக்கு இந்த விவாதத்தை நீங்கள் நடத்த முடிவு செய்துள்ளீர்கள். இதன்மூலம் மணிப்பூரில் பாதிக்கப்படும் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நீங்கள் உண்மையிலேயே மணிப்பூர் மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால், நள்ளிரவில் அல்லாமல் சரியான நேரத்தில் உரிய முறையில் விவாதிக்க வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.

இது இந்த அரசின் அக்கறையின்மை மற்றும் அலட்சியத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. மணிப்பூரில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 67 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. தேவாலயங்களும் கோயில்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றபோது, கற்பனை செய்ய முடியாத வேதனையைச் சகித்துக்கொண்டிருக்கும் குடும்பங்களைச் சந்தித்தோம். நான் அதில் சந்தித்த ஒரு தாயை பற்றி பேச விரும்புகிறேன், அந்த தாய் தனது மகன் உயிருடன் இருக்கிறானா அல்லது உயிரிழந்துவிட்டானா என்பதை தெரிந்துகொள்ள ஒவ்வொரு நாளும் முகாமின் நுழைவாயிலைக் நோக்கி பார்த்துக்கொண்டு, யாராவது வந்தால் அந்த நுழைவாயிலைக் நோக்கி ஓடி தனது மகன் வந்து விட்டானா  என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்.

இறுதியாக, எதிர்பார்ப்பதை விட்டு விட்டு, அவர் கூறினார்  தயவு செய்து எனது மகன் இருக்கிறானா  இல்லையா  என்று  சொல்லுங்கள், நான் காத்து கொண்டு இருப்பதை விட்டு விடுகிறேன்  ஏனென்றால் நான் ஒவ்வொரு நாளும் நான் எனது மகன் உயிரோடு இறுகிறானா என்கிற செய்திக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் . இதே வேதனையை ஆயிரக்கணக்கான தாய்மார்கள் அனுபவிக்கின்றனர்; தங்களின் அன்புக்குரியவர்கள் எந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதை அறிய முடியாமல் நிரந்தர தவிப்பில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு துயரம் ஏற்பட்டிருக்கும்போதும், மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க எந்த உறுதியான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் கைகளில் ஆயுதங்கள் எப்படிச் சென்றது? இதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? இழந்த உயிர்களுக்குப் பதில் சொல்வது யார்? மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அவல சம்பவம், நாடு தழுவிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது, இதுவரை யாரும் அந்த சம்பவத்திற்கு பதிலளிக்கவில்லை மற்றும் பொறுப்பேற்கவில்லை. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒன்றிய உள்துறை அமைச்சர் இனி மக்களுக்கு “சுதந்திரமான நடமாட்டம்” (free movement) இருக்கும் என்ற வாக்குறுதி அளித்த பிறகு அங்கு வன்முறை நின்றதா? இல்லை. வன்முறை தொடர்ந்தே வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் "சுதந்திரமான நடமாட்டம்" அறிவித்த பிறகும் 103க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். இதுபோன்ற சூழலில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தி என்ன பயன்? அமைதியை நிலைநிறுத்துவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

Kanimozhi MP says Time to answer to the people of the country

இதற்கிடையில், மணிப்பூரில் கல்வி நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. 14,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்னும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருக்கின்றனர். ஆனால், மணிப்பூருக்கான கல்வி பட்ஜெட்டை ஒன்றிய அரசாங்கம் வெறும் 2.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. உணவு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, உணவுப் பொருட்களுக்கான பட்ஜெட் 28 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாமல், மக்கள் எப்படி வாழ முடியும்?. மணிப்பூரில் இயல்புநிலை மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு வழியே நடந்தேற வேண்டும். குறிப்பாக மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் அரசியலை விட, அமைதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் அரசாக அமைய வேண்டும். மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் அரசியலை மட்டுமே ஒன்றிய அரசு செய்து வருகிறது. இந்த அரசாங்கம் பெண்களின் உரிமைகள் குறித்து பெருமையாகப் பேசுகிறது, ஆனால் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய அதன் அக்கறை எங்கே போனது? இந்த அரசாங்கம் தனது செயல்பாடுகள் குறித்து நேர்மையாக இருந்து, நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய நேரம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்