Skip to main content

தங்கதமிழ்செல்வனின் வருகையால் திமுகவுக்கு என்ன பலன்? - பத்திரிகையாளர் லஷ்மணன் பேட்டி

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

தமிழகத்தின் அரசியல் பார்வையாளர்களில் முக்கியமானவர் பத்திரிகையாளர் லஷ்மணன். தமிழக அரசியல் சம்பந்தமாக இவர் கூறும் கருத்துகள் தொலைக்காட்சி விவாதங்களில் அதிகம் கவனிக்கப்படும். தற்போது அமமுகவில் இருந்து தங்கதமிழ்செல்வன் விலகி உள்ள நிலையில், அவரின் விலகல் அமமுகவிற்கு எவ்விதமான பாதிப்புக்களையும், திமுகவுக்கு எந்த மாதிரியான உற்சாகத்தையும் கொடுக்கும் என்பதை நாம் அவரிடம் கேள்வியாக வைத்தோம். இதோ அவரின் பதில்கள்...

 

journalist Laxmanan speak about thangathamilselvan issue

 

அமமுகவில் இருந்து தங்கதமிழ்செல்வன் விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 

இதை ஏதோ ஒரு சந்தர்பத்தில், ஒரு நிகழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் வெளியே வந்ததாக நான் நினைக்கவில்லை. தங்கதமிழ்செல்வன் தினகரன் தலைமையை ஏற்ற சில மாதங்களில் இருந்தே அவரின் இயல்பின் காரணமாக இயல்பிலேயே தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக்கூடியவராக இருந்தார். அதை வரம்பு மீறிய செயல் என்று சொல்லமாட்டேன். அந்த சுதந்திரத்தை அவர் உடனடியாக எடுத்துக்கொள்ளக் காரணம் தினகரனும், தங்கத்தமிழ் செல்வனும் வேறு யார்யாரோ இல்லை. தினகரன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அதே தேனி மாவட்டத்தை சார்ந்தவர்தான் தங்கதமிழ்செல்வன். அந்த முதல் நாளில் இருந்தே இருவருக்குமான அறிமுகம் உண்டு. இடையில் சில கசப்பு வேறுபாடுகள் இருந்தாலும, அந்த கட்சியின் மற்ற நிர்வாகிகள் யாருக்கும் இல்லாத சுதந்திரத்தோடு மனதில் என்ன நினைக்கிறாரோ அதை பத்திரிகையாளர் சந்திப்புகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூறிவந்தார். அந்த கருத்துக்களை கட்சி தலைமை ஏற்குமா என்று கூட நினைக்காமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவந்தார். நாமும் எல்லா கட்சி விவகாரங்களையும் ஒரு பத்திரிகையாளராக கவனித்து வருகிறோம். அமமுகவில் பல சோதனையான நிலைகளில் அவர் சில தேவையில்லாத கருத்துக்களை கூறிய போதும், அவரை தினகரன் கூப்பிட்டு கண்டித்துள்ளார். அவரும் நான் மாத்திக்கிறேன் அண்ணே... என் கருத்தை அவுங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்க என பல சமயங்களில் விளக்கங்களை கொடுத்துக்கிட்டேதான் இருந்தார். 
 

பொதுவா இப்ப எப்படி அரசியல் மாறியுள்ளது என்றால், நாம ஏத்துக்கிட்ட கொள்கைக்காக கட்சி ஜெயிக்குதோ இல்லையோ அதில் இருந்துதான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருப்பதில்லை. கட்சியில் இருந்தா நமக்கு என்ன கிடைக்கும், எப்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான் அதிகமா இருக்கும். அரசியல் என்றால் சுயநலம் சார்ந்ததுதான். ஆனால், சுயநலம் மட்டுமே பிரதானமா இருக்கிறது என்ற நிலை தற்போது காணப்படுகிறது. இந்த தேர்தலுக்கு முன்னாடி தினகரன் பெரிய அளவில் வெற்றி பெறுவார், குறைந்தது 15 சதவீத வாக்குகளை அவர் வாங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதில் நான்கில் அல்லது மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைத்தான் அவர் பெற்றுள்ளார். இதனால், தினகரனை நம்பி வந்தோமே நம்முடைய அரசியல் எதிர்காலம் என்ன, தினகரனுக்கு அரசியல் எதிர்காலம் இருக்குமா, இந்த ஒரு தேர்தலி்ல் மட்டுமா தோல்வி, இல்லை அடுத்தடுத்த தேர்தல்களில் அது எதிரொலிக்குமா என்ற பயம் கலந்த பதற்றம் அந்த கட்சிகாரங்க மத்தியில் இருக்கும்.
 

தங்கதமிழ் செல்வனும் அதைத்தானே சொல்கிறார், தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று?
 

ஆமாம், அவருக்கும் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் அந்த சஞ்சலம் இருக்கும். தோல்வியை சந்தித்த இயக்கத்தின் மீது மற்ற கட்சிகள் சில வேலைகளை செய்வாங்க. அந்த கட்சியில் உள்ள திறமையானவர்களை தங்களை நோக்கி இழுப்பார்கள். 'நீங்க எங்ககிட்ட வந்துடுங்க, அங்க இருப்பது புண்ணியமில்லை' என்று சொல்லும்போது சிலர் விலகி செல்வார்கள்தான். இதே தங்கதமிழ்செல்வனை தேர்தலுக்கு முன் திமுக அழைத்திருந்தால் அவர் நிச்சயம் அணி மாறியிருக்கமாட்டார். இப்போது தோல்வி அவரை சுற்றியதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், தினகரன் தங்கதமிழ்செல்வனின் எல்லா கருத்துக்களையும் பொருத்துக்கொண்டுதான் அவரோடு இருந்தார். ஆனா வரம்புமீறி சொல்லக்கூடாத வார்த்தைகளை அவர் பேசியதை எந்த கட்சித்தலைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன், ஸ்டாலினே அந்த வார்த்தையை விரும்பவில்லை என்பதுதான் எனக்கு கிடைத்த தகவல். அவ்வாறு அவர் அதிமுகவை பற்றி திமுகவிற்கு சென்று விமர்சனம் செய்தால் கூட அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கட்சியில் இருந்துகொண்டே அந்தக் கட்சியின் தலைவரை விமர்சனம் செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கதமிழ்செல்வனும் அதை பாடமாக ஏற்றுக்கொண்டார் என்றால், அவர் எந்த கட்சிக்கும் போனாலும் அவரிடத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். அதற்கு தகுதியான, திறமையான ஆள்தான் தங்கதமிழ்செல்வன். அதில் ஒன்றும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
 

இந்த மாதிரி தொடர்ச்சியாக முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு, தினகரனுடைய செயல்பாடுகள்தான் காரணமா?
 

தங்கதமிழ் செல்வன் மாதிரியானவர்கள் எல்லாம் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவதால் நாம் அவரை பற்றி பேசுகிறோம். அவரை போல கடுமையாக உழைக்கும் மற்ற நிர்வாகிகளும் அந்த கட்சியில் இருக்கலாம். ஆனால், அவர்கள் செயல்பாடுகள் வெளியி்ல் தெரிவதில்லை. வேறு ஒரு கட்சிக்கு செல்லும்போது, கட்சித் தலைமை மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறிவிட்டுத்தான் செல்வார்கள். ஆனால், செந்தில் பாலாஜியோ அல்லது கலைராஜனோ அமமுக-வில் இருந்து விலகியபோது தினகரன் மீது எந்த குற்றச்சாட்டுக்களையும் வைக்கவில்லை. எனக்கு தினகரன் மீது எந்த கருத்து வேறுபாடும் இல்லை, அந்த கட்சி பிடிக்கவில்லை அதனால் திமுகவில் சேர்ந்தேன் என்றுதான் கூறினார்கள்.
 

செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத் என்று அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுக இணைந்த சூழ்நிலையில், தங்கதமிழ்செல்வனும் அமமுகவில் இருந்து விலகியிருப்பது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
 

கைவண்டி இழுப்பவர்கள் சங்கத்தில் இருந்து இரண்டு பேர் வெளியேறினார்கள் என்றால் கூட அந்த சங்கம் பாதிக்கத்தான் படும். அதுபோல இந்த மாதிரி ஊரறிந்த ஒருவர், லோக்கல் செல்வாக்குள்ள மனிதர் ஒரு கட்சியில் இருந்து வெளியேறினால் அது அந்த கட்சிக்கு பெரிய இழப்புதான். அது பின்னடைவு என்பதற்காக அவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதை எந்த கட்சி தலைமையும் ஏற்றுக்கொள்ளாது. ஒருத்தர் அப்படி போவதால அப்படியே அந்த கட்சி காணாமல் போறதும் இல்லை. வேறு ஒருத்தர தலைமை பொறுப்புகளில் போடத்தான் போறாங்க. அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை தேர்தல் முடிவுகளில்தான் கண்டுபிடிக்க முடியும். இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முன்கூட்டியே அதை நம்மால் சொல்ல இயலாது.
 

தங்கத்தமிழ் செல்வனின் வருகையால் தேனி மாவட்டத்தில் திமுக பலன் அடையுமா?
 

அப்படி உடனே சொல்ல முடியாது. அதை போலவே தங்கதமிழ்செல்வனை சேர்ப்பதால் திமுகவுக்கு எந்த பலனும் இல்லை என்றும் கூறமுடியாது. கடந்த ஆண்டுகால தேனி மாவட்ட அரசியலை எடுத்துப்பார்த்தால், அது மற்ற மாவட்டங்களை விட சற்று அதிமுகவுக்கு ஆதரவான மாவட்டம். இன்றைக்கும் அது தொடர்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட தமிழ்நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், தேனியில் அதிமுகதான் வெற்றிபெற்றது. அதுக்கு பணம் காரணமாக சொல்லப்பட்டாலும் அதிமுகதான் வெற்றிபெற்றது. தேனி மாவட்ட திமுகவி்லும் கோஷ்டி மோதல் இருக்கு. அப்படி இருக்கும்போது இவரை யார் மூலம் அணுகி கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை. தென்மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கிற ஐ.பெரியசாமியை கேட்டார்களா அல்லது தேனி மாவட்டத்தை சேர்ந்த மூக்கையா, கம்பம் ராமகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரனை கேட்டார்களா என்று தெரியவில்லை. இல்லை தற்போதைய தேனி மாவட்ட செயலாளர் ஜெயக்குமாரை கேட்டார்களா, அவர்கள் எல்லாம் தங்கதமிழ் செல்வன் இணைப்புக்கு ஒத்துக்கொண்டார்களா என்று தெரியவில்லை. அப்படி ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், கட்சி தலைமை அவரை சேர்ந்துகொள்ளும். ஆனால், இந்த இணைப்பு தேனி திமுகவை புரட்டிப் போடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவர்களுக்கு நிச்சயம் உதவும் வகையில் இருக்கும்.