கடந்த ஒரு மாதமாகவே அ.தி.மு.க.வில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள், தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து அ.தி.மு.கவில் இதுதொடர்பாக யாரும் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனை அடுத்து, சில நாட்களாக அமைதியாக இருந்த இந்தப் பிரச்சனை 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் காரசாரமாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகியது.
முக்கியமாகக் கடந்த, 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் மாறி மாறி சந்தித்துப் பேசி, ஒருவழியாக தற்போது இ.பி.எஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார் பன்னீர்செல்வம். இதுதொடர்பாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களிடம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
அ.தி.மு.க.வில் சில வாரங்களாக அதிகார மட்டத்தில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், அதற்கு கட்சித் தலைமை முதலில் முட்டுக்கட்டை போட்டது. அடுத்து யார் முதல்வர் வேட்பாளர் என்பதில், பன்னீர் செல்வம் - எடப்பாடி இடையே பிரச்சனை இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பன்னீர் செல்வம் தற்போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்துள்ளார். இது தி.மு.க.விற்கு எந்த அளவிற்கு நெருக்கடி தரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
இந்த மோதல், சண்டை எல்லாம் டுபாக்கூர் தனம்தான், இதில் எந்த உண்மையும் இல்லை. சண்டை மாதிரி மக்களுக்குக் காட்டிவிட்டு, தற்போது அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இவர்கள் சமாதானம் ஆனதற்கு மிக முக்கியக் காரணம் பா.ஜ.க.வை சமாதானம் செய்வதற்குத்தான். இவர்கள் ஒன்றும் கொள்கைக்காகச் சண்டை போட்டவர்கள் கிடையாது அல்லது எம்.ஜி.ஆர் ஆட்சியை யார் தருவது என்பதற்காக அடித்துக் கொண்டதும் கிடையாது. அதற்கெல்லாம் இவர்களுக்கு எவ்விதத் தகுதியும் கிடையாது. இவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரவில்லை. எனவே அதை எல்லாம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. பா.ஜ.க.வை திருப்திப்படுத்த வேண்டும், ஆறு மாதம் வண்டியை ஓட்ட வேண்டும் என்ற இரண்டு காரணங்களுக்காகவே இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு இந்த ஆட்சி நீடிக்காது என்று கூறி வந்த நிலையில், நான்கு ஆண்டு காலம் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது. எனவே தற்போது அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அ.தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்யும் என்று கூறி அந்தக் கட்சியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அந்தக் கட்சியில் வேறு யாரும் இல்லை என்பது, இதன் மூலம் உறுதியாகி உள்ளது. எடப்பாடி அதிகாரத்தை வைத்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிகாரம் இருந்ததால் இதனை அவர் சாதித்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் மற்றொன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதேபோல, பன்னீர்செல்வத்திற்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது இதன்மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியில் அவர் அலங்காரத்துக்கு மட்டுமே அமர வைக்கப்பட்டுள்ளார்.
அவரால் எதனையும் சாதிக்க முடியாது என்பது அவர் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த போதே உறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே அவரின் அதிகாரம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. அந்தக் கட்சி தற்போது கீரியும் பாம்பையும் ஒன்றாகக் கட்டி வைத்தது போல் இருக்கிறது. பல முதல்வர் வேட்பாளர்களை ஒன்றாகக் கட்டி குழுவை அமைத்துள்ளார்கள். அவர்கள் எப்படிக் கட்சியை வழிநடத்துவார்கள் என்று தெரியவில்லை. நாளை ஆட்சி அதிகாரம் என்ற மூட்டை பிரிக்கப்பட்ட உடன் அந்த விலங்குகள் எல்லாம் எப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் பார்க்கப் போகிறோம். உடைந்த நாற்காலிக்கு அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது அவர்களை உடைந்த நாற்காலி என்றெல்லாம் கூறுகிறீர்கள், ஆனால் சசிகலா வந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும், அவர்கள் எல்லாம் ஒன்றாகி விடுவார்கள் என்ற பேச்சு அதிகம் எழுகின்றதே அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதற்கு நான் ஒரு கதை சொல்ல வேண்டும். இரண்டு பூனைகள் ஒரு ஆப்பத்தை திருடி வந்து பங்கு பிரிக்கப் பார்த்தன. அப்போது அவைகளுக்குள் சண்டை வந்தது. எனவே சமாதானம் செய்ய வந்த குரங்கு அவர்களின் ஆப்பத்தை முழுவதும் சாப்பிட்டுவிட்டுச் சென்றது. அதைப் போல சசிகலா வந்து, தங்களுக்குக் கிடைத்த அ.தி.மு.க என்ற ஆப்பத்தை தின்றுவிடாமல் இருக்க தற்போது கட்சியை அவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டுள்ளார்கள். அவர்கள் வெளியே வந்ததால் கூட அவர்களுக்குள் பங்கீடுதான் நடக்குமே அன்றி, பெரிய அரசியல் மாற்றத்தை அவர்கள் நடத்திக் காட்டிவிடப் போவதில்லை. எனவே அவர்கள் வந்தால் வானம் இடியும், பூகம்பம் வரும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே நான் பார்க்கிறேன். வரும் 2021 -ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க அபார வெற்றிபெற்று மு.க ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்பது மட்டும் நிஜம். இவ்வாறு கூறியுள்ளார்.