Skip to main content

கொள்ளை! பேரம்! ஓட்டு வேட்டை! இவர்களுக்கு கரோனா தேவைப்படுகிறது!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

dddd

 

'வீட்டில் இருங்கள். விலகி இருங்கள்' என்று மக்களுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார். கரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால் அவர் இப்படி டிரிப் அடிக்கிறாரா என்று பார்த்தால், ஊரடங்கை செப்டம்பர் மாதத்திலும் நீடிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசிடம் தமிழக அரசின் அதிகாரிகள் தெரிவிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் கரோனா நிலவரம் உள்ளது.

 

மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறது எனப் பார்த்து அதற்கேற்ப செயல்பட்டு வந்த எடப்பாடி அரசு, இந்த கரோனா ஊரடங்கு நீடிப்பதே தனக்கு நல்லது என்ற கண்ணோட்டத்துடன் ஆகஸ்ட் 29 அன்று மத்திய அரசின் உத்தரவு வரும் நேரத்தில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் கீழ் காட்டப்பட்டு வந்த தொற்று எண்ணிக்கையை 6 ஆயிரத்து 352 எனக் காட்டியது. இது எல்லாவற்றிற்குமே காரணம் இருக்கிறது என்கிற கோட்டை வட்டாரத்தினர், "கரோனாவால் எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் வாழ்கிறார்கள். சொந்தக் கட்சிக்குள் கிளம்பும் எதிர்ப்பையும், எதிர்க் கட்சிகளின் நெருக்கடியையும் சமாளிக்க கரோனா ரொம்பவே கைகொடுக்கிறது எடப்பாடிக்கு'' என்கிறார்கள்.

 

dddd


நோயாளிகள் பெயரில் கொள்ளை!

 

கரோனா நிலவர ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் மாவட்ட விசிட்டுகளைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. இது அவரது தேர்தல் வியூக வகுப்பாளர்கள் போட்டுக் கொடுத்த திட்டம். எதிர்க்கட்சிகளுக்கு இத்தகைய விசிட்டுகளுக்கோ, நிவாரணம் வழங்கும் நிகழ்வுகளுக்கோ அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், மாவட்டம் மாவட்டமாக எடப்பாடி விசிட் அடிக்கும்போது, அவரை வரவேற்பதற்காக மாவட்ட எல்லையில் கூட்டம் கூட்டப்படுகிறது. அதுபோலவே, மாவட்ட அமைச்சர்களும் அவரவர் மாவட்டங்களில் விசிட் அடித்து கரோனாவை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் எஸ்.பி.வேலுமணி, மதுரை மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஒரு பக்கம், செல்லூர் ராஜூ இன்னொரு பக்கம், தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், அவரது மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் ஆகியோர் பங்கேற்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் கூட்டத்தைக் கூட்டி விடுகிறார்கள்.

 

dddd

 

கட்சி செல்வாக்கை வளர்த்துக்கொண்டு, மக்களுக்கு நிவாரண உதவி என்ற பெயரில் தேர்தல் கணக்கும் போடும் ஆளுந்தரப்பினர், கரோனா நோயாளிகளுக்காக செலவிட மத்திய அரசு ஒதுக்கிய நிதியின் வாயிலாக, பேஷண்ட் அட்மிஷன், அவர்களுக்கான சிகிச்சை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என எல்லாவற்றிலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொள்ளைப் பணம், தேர்தல் நேரத்தில் உதவும் என்பது மந்திரிகளின் கணக்கு. அது மட்டுமின்றி, வேறு சில கணக்குகளும் போடுகிறார்கள்.

 

அரியர்ஸ் மாணவர்களிடம் ஓட்டு வேட்டை!

 

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டுத் தேர்வுகள் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது எடப்பாடி அரசு. தேர்வுக் கட்டணம் செலுத்தியுள்ள அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டிருப்பதால், அரியர்ஸ் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனைத் தேர்தல் நேர ஓட்டுகளாக மாற்றுவதற்கு அ.தி.மு.க.வின் மாணவர் அமைப்பு, ஐ.டி.விங் ஆகியவை தீயாய் வேலைசெய்து மீடியா-ஆன்லைன் என விளம்பரங்களை வைரலாக்கி வருகின்றன.

 

முதல்வர் எடப்பாடியும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் அதிகாரிகளும் இணைந்து எடுத்த, அரியர்ஸ் மாணவர்கள் பாஸ் என்கிற முடிவுக்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் வெளிப்பட்டு வருகிறது. கரோனாவை காட்டி தவறான முடிவுகளை கல்வித்துறையில் அமல்படுத்துவதாக எடப்பாடிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றன. செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் இருந்தால், தேர்வுகளை ரத்து செய்து அடுத்த ஆண்டு எழுதும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும். கரோனா காலத்தினால் ஏற்படும் இழப்புகளைச் சரிகட்ட கல்வி, வேலை வாய்ப்புகளில் உள்ள கட் ஆஃப் சலுகைகளில் ஒரு வருடத்தைக் கூடுதலாக்கலாம், இதை விட்டுவிட்டு ஆல் பாஸ் என்கிற முடிவு சட்ட விதிகளுக்கு எதிரானது என அரசுக்கு கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுக்கும் பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் புகார்களை அனுப்பியிருக்கிறார்கள் கல்வியாளர்கள். இதனால், ஆல் பாஸ் உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படுமா என்கிற கேள்வி கல்வித்துறையில் எதிரொலிக்கிறது. ஆனால், யாராவது வழக்கு போட்டு, நீதிமன்றம் உத்தரவு போடட்டும். எதிராக தீர்ப்பு வந்தால், அரசு செய்ததை, நீதிமன்றம் மூலம் எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டதாக மாணவர்களிடம் அனுதாப வாக்குகளைப் பெறலாம் எனவும் ஆலோசிக்கப் பட்டுள்ளது.

 

பார் திறக்க பேரம்!

 

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும், பிரபல ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு கிளப்புகளில் இருக்கும் மதுபான பார்களுக்கு ஆகஸ்ட் இறுதிவரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கோரி, எடப்பாடியிடம் பார் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற சில பேரங்களும் நடந்திருக்கின்றன. பார் அனுமதி இந்த பேரத்தின் அளவைப் பொறுத்தே அமையும் என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். வருமானத்தில் காட்டும் இந்த அக்கறையை மக்கள் நலனில் காட்டுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

ஆக்ஸிஜன் இல்லாமல் பலியாகும் உயிர்கள்!

 

கரோனா நுழைய முடியாத மாவட்டம் என சொல்லப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில், தற் போதைய பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 751 பேர். உயிரிழப்பு 88 பேர் என்பது ஆகஸ்ட் கடைசி ஞாயிறு கணக்கு.

 

ஆகஸ்ட் 22 ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் இருந்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் உள்ளிட்ட 3 பேர் ஒரே நாளில் இறந்தனர். அதற்கு காரணம் என்ன என்பதை 26 ஆம் தேதியன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பூவதி வெளிப்படுத்தினார். சிகிச்சையில் இருந்தவர்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால், டெக்னிக்கல் பிரச்சனை ஏற்பட்டு கடந்த 22 ஆம் தேதியன்று ஒரே நாளில் 3 கரோனா நோயாளிகள் இறந்து உள்ளார்கள் என்றார்.

 

போதுமான ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் சரியான சர்க்கரை டெஸ்ட், எடுக்காததாலும் முறையாக ஐ.சி.யூ. பராமரிக்கப்படாததினாலும் இந்த 3 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. உரிய கவனம் செலுத்தாத மருத்துவர் ரவீந்திரன், மருத்துவர் பாபு ஆனந்த் மற்றும் செவிலியர்கள் சூரியகலா, பானுபிரியா, பிரியா, நாகலெட்சுமி, கவிதா, ஊழியர் மணிராஜ் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பி உள்ளார் டீன்.

 

Ad

 

புதுக்கோட்டையை பொறுத்தவரையில் இராணி மருத்துவமனை மட்டுமே கரோனா சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த மாத ஆரம்பத்தில் திடீர் என விஜயபாஸ்கர் வந்து சிறுநீரக சிகிச்சை மையத்தை 15 நாட்களில் 350 படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையமாக அவசர அவசரமாக மாற்றினார். இதை முதல்வர் எடப்பாடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில் 380 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருருக்கிறார்கள். இவர்களுக்கு 21 செவிலியர்கள் மட்டுமே 24 மணிநேரம் பராமரித்து வருகிறார்கள். அந்த மருத்துமனையில்தான் ஐ.சி.யுவில் இருந்த 3 பேர் இறந்து போயிருக் கிறார்கள்.

 

கடந்த 22 ஆம் தேதி அந்த அறையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆஸ்சிஜனுக்கு வரும் சிலிண்டர் அறையில் இருக்க வேண்டிய பொறுப்பாளர் மணிராஜ் அங்கே இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த நேரத்தில் அதற்குள்ளாக 3 பேர் இறந்திருக்கிறார்கள். தகவல் கிடைத்து அங்கே உடனே வந்த டீன் அனைவரையும் திட்டி தீர்த்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

 

dddd

 

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி டீன் ஆன மருத்துவர் பூவதியிடம் பேசினோம். இந்த நோட்டீஸ் என்பது ஒவ்வொரு முறையும் இறப்பு நடக்கும் போது வழக்கமாக விளக்கம் கேட்டு மெமோ அனுப்பும் நடைமுறைதான். இந்த மெமோ கொடுப்பதன் மூலம் அவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காக மட்டுமே கொடுக்கிறோம். நடவடிக்கைக்குரியதல்ல'' என்றார்.

 

சுகாதாரத்துறை அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐ.சி.யூ., தீவிர சிகிச்சை பிரிவிற்கே இந்த நிலை என்றால் மற்ற பிரிவுகள் மற்ற அரசு மருத்துவமனைகளின் நிலை எவ்வளவு கேவலமாயிருக்கும் என நோயாளிகளுக்கு அச்சம் அதிகரித்துள்ளது.

 

தமிழகத்திலே புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும்தான் அதிகளவு கரோனா சிகிச்சை மையம் உள்ளது. புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, விராலிமலை என அனைத்து பகுதியிலும் கரோனாவுக்கு என்று சிறப்பு சிகிச்சை மையம் அமைத்துள்ளனர். கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தயார்படுத்துவதற்கு ஒவ்வொன்றுக்கும் இலட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். விராலிமலை அரசு மருத்துவ மனையின், கரோனா சிகிச்சை மையத்திற்கு மட்டும் 45 இலட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

 

கரோனா தாக்கம் ஏற்பட்டு 150 நாட்கள் கடந்த நிலையில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, விராலிமலை ஆகிய பகுதியில் உள்ள அரசு மருத்துமனைகளில் முக்கியப் பொறுப்பில் உள்ள சீனியர் மருத்துவர்கள் நால்வர் நேர்மையாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு வந்துள்ளனர். கரோனா சிகிச்சை மைய செலவு கணக்குகளில் கையெழுத்து போடும்போது இவர்கள் கேள்விகளைக் கேட்டு சிக்கல் ஏற்படுத்துவார்கள் என்று யோசித்து அதிரடியாக இரவோடு இரவாக அவர்களை இடமாற்றும் செய்திருக்கிறது சுகாதாரத்துறை.

 

தேர்தல் லாபக் கணக்கு!

 

முறையான ஆக்ஸிஜன் வசதியில்லாமல் 3 உயிர்களைக் கொன்றுவிட்டு, கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக் கணக்கில் கொள்ளையடிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான், கரோனா நீடிக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஜனவரி வரை கரோனா இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

 

Nakkheeran

 

அதன்பிறகு, பொங்கல் பரிசுத்தொகை, கரோனா நிவாரணத் தொகை என ரேஷன் கடை மூலமே ஆயிரங்களை வழங்கினால் அதனை தேர்தலில் ஓட்டுகளாக அறுவடை செய்து, மீண்டும் இதே அதிகாரத்தை அனுபவிக்கலாம் என கணக்குப் போடுகிறது ஆளுங்கட்சி.

 

-கீரன், இளையர், ஜெ.டி.ஆர், பகத்சிங்