
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் மாநாடு. இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்க எஸ்.ஜே சூர்யா, எஸ்.ஏ சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப் ஜானரில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகுவதாக தகவல் வெளியானது. வெங்கட் பிரபும் உறுதிப்படுத்தி ஒப்புக்கொண்ட படங்களை முடித்து விட்டு இப்படம் தொடங்குவதாக கூறியிருந்தார். ஆனால் அதன்பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது ஜப்பானில் அடுத்த மாதம் முதல் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில், “நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். மாநாடு தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.