
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் பெருவாரியான அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடிய ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ காட்சியை அஜித் ரசிகர்களை தாண்டி பல ரசிகர்கள் ரசித்தனர். இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரியா பிரகாஷ் வாரியர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ஆதிக் ரவிச்சந்திரன் குறித்து பேசுகையில், “நித்யாவாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. என்றைக்குமே அது ஸ்பெஷலாக இருக்கும். படத்தில் சின்னதா ஏ.கே. 64-னு (அஜித்தின் அடுத்த படம்) ஹிண்ட் கொடுத்திருக்கீங்க. ஓப்பனாவே உங்கக்கிட்ட ஒரு சான்ஸ் கேட்கிறேன். அந்த படத்தில் என்னை பரிசீலினை செய்யுங்க” என்றார்.
பின்பு அஜித் குறித்து பேசுகையில், “அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப நன்றியுள்ளவராக உணர்கிறேன். அவரின் விசுவாசமான ரசிகையாக இனி இருப்பேன். அவருடன் இரண்டு விஷயங்களை மிஸ் செய்துவிட்டேன். சார் சமைக்கிற பிரியாணி, அவர் கூட ஒரு டிரைவ், இது ரெண்டும் என் பக்கெட் லிஸ்டில் இருக்கிறது. வரும் காலங்களில் அது நடக்கும் என நம்புகிறேன். அவர் இப்போது ரேஸில் இருக்கிறார். அதற்காக பிரார்த்தனை செய்கிறேன்” என்றார்.