Skip to main content

கடும் வர்த்தக போரில் அமெரிக்கா - சீனா!

Published on 17/04/2025 | Edited on 17/04/2025

 

America - China in a fierce trade war

சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ஆம் தேதி அறிவித்தார். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் உலக நாடுகள் அதிர்ந்து போயின. பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34% வரி விதிக்கப்படவுள்ளதாக சீனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து. இந்த சூழலில், அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா விதித்த 34% வரியை 24 மணி நேரத்திற்குள் திரும்ப பெறவில்லை என்றால் சீனப் பொருட்களுக்கு 104% கூடுதல் வரியை அமெரிக்கா விதிக்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அமெரிக்கா மீதான 34% வரிவிதிப்பை 24 மணி நேரக் கெடு முடிந்தும் சீனா பெறாமல் இருந்தது. 

இதனையடுத்து, அமெரிக்கா எச்சரிக்கை விட்டதன்படி சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 104% வரி விதிக்கப்படுவதாகவும், இந்த வரிவிதிப்பு கடந்த 9ஆம் தேதி அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கப் பொருட்களுக்கு 84% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா அறிவித்தது. உடனடியாக சீனாவுக்கு பதிலடியாக, சீனப் பொருட்களுக்கு 125% வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 125% வரி விதித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

அமெரிக்கா - சீனா இடையிலான வரி விதிப்பு நடவடிக்கையால் வர்த்தக போர் ஏற்பட்டிருக்கும் நிலையில், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரி விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பை நேற்று (16-04-25) வெளியிட்டுள்ளார். ஏவுகணை, மின்சார காருக்கு பயன்படுத்தும் அரிய உலோகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா கடந்த 15ஆம் தேதி தடை விதித்ததற்குப் பதிலடியாக, சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா பல மடங்கு உயர்த்தியுள்ளது . சீனா விதித்த தடை நடவடிக்கையால், அமெரிக்காவின் பாதுகாப்பு, தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா கணித்திருந்த நிலையில், சீன பொருட்களுக்கு அதிகப்படியான வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா - சீனா இடையில் வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்